(எம்.எம்.ஜபீர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் பாதுகாப்பு மட்டுமல்லாது உரிமைக் குரலுமாகும். இதனை இன்று சிறிய கட்சிகளை உருவாக்கி நாங்கள் தேசிய தலைவர்கள் என்று செல்லிக் கொள்பவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது. இது மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம்களின் விடுதலைக்கான பெரும் இயக்கம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரித்து நாவிதன்வெளி 6ஆம்,கொளனி கிளைக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிராச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாவிதன்வெளி 6ஆம், கொளனி கிளைக் குழுவின் தலைவர் ஏ.அனீபா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தல் காலங்களில் வாக்குகளை அள்ளி வழங்குகின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு அபிவிருத்தி செய்யவில்லைஇ தொழில் வாய்ப்பு வழங்கவில்லை அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனவே முஸ்லிம்களின் பிரச்சினைகளை எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தைரியமாகவும், துணிச்சலாகவும் கையாளும் சக்தி எங்களுடைய முஸ்லிம் காங்கிரஸிக்கு மட்டும்தான் உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாக்கு பலத்தினை அதிகரிப்பதன் ஊடாக முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும். தேசிய தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்து மக்களின் வாக்குகளை சிதறடித்த பலர் இன்று முகவரியில்லாமல் குறிப்பாக பயந்த கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்யுமளவிற்கு பின்னடைவை சந்தித்து வருவதை எம்மால் காணக்ககூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலை மாற்றியமைக்கப்பட்டு ஒரே குரலில் முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தியைக் கொண்ட கட்சிக்கு ஒருமித்து வாக்களித்து முஸ்லிம் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணில் போட்டியிடும் வேட்பாளர் பைசால் காசீம், மத்தியமுகாம் - சவளக்கடை மத்திய குழுவின் தலைவர் ஏ.சீ.நஸார் ஹாஜி, முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன், மத்தியமுகாம் - சவளக்கடை மத்திய குழுவின் துணைத் தலைவர் ஏ.எல்.ஜலீல், 6ஆம் கொளனி ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.அபூபக்கர், மத்தியமுகாம் - சவளக்கடை மத்திய குழுவின் செயலாளர் எம்.எம்.நவாஸ், மத்தியமுகாம் - சவளக்கடை மத்திய குழுவின் பொருளாளர் முஹம்மட் அலி, முன்னாள் மத்தியமுகாம் - சவளக்கடை மத்திய குழுவின் தலைவர் ஏ.எம்.அஸீஸ், மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், போரளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.