இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதற்காக வருகிற 4ம் திகதி இந்திய வீரர்கள் இலங்கை புறப்பட்டு செல்கின்றனர். செப்டம்பர் 1ம் திகதி வரை போட்டிகள் நடைபெறும். இந்த டெஸ்ட் தொடர் வருகிற 12ம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கள் மனைவி, காதலியை அழைத்து வர இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், இலங்கை செல்லும் இந்திய வீரர்கள் கடந்த 1 மாதமாக ஓய்வில் இருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதுமான அளவு நேரத்தை செலவழித்து விட்டனர். இதனால் அவர்களின் மனைவி, காதலிகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.