GuidePedia

மாதம்பையில் இருக்கின்ற SLTJ ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கும் ஊர் ஜமாஅத்தினருக்குமிடையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஜமாஅத்தே இஸ்லாமியோடு தொடர்புபடுத்துவதற்கு SLTJ ஐச் சேர்ந்தவர்கள் பெரும் முயற்சி செய்கின்றனர். ஜமாஅத்தே இஸ்லாமி அதனை முற்றாக மறுக்கின்றது. மாதம்பையில் நடந்துவரும் சர்ச்சைகளுக்குரிய முழுப் பொறுப்பையும் SLTJ தான் ஏற்க வேண்டும் என்பதை ஊர் மக்கள் தெளிவாகச் சொல்கின்றனர்.
பிரச்சினையின் சுருக்கம் 2013 யில் இருந்து ஐந்து SLTJ ஆதரவாளர்கள் இன்னும் சில வெளியூர் ஆதரவாளர்களையும் சேர்த்துக் கொண்டு ஐங்காலத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகை போன்றவற்றை வீடுகளில் நடத்த முயற்சித்துள்ளனர். இதன் விளைவாகவே ஊரின் அதிருப்தியை அவர்கள் சம்பாதித்துள்ளனர்.
இப்பிரச்சினை முற்றி அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக சிலாபம் நீதவான் நீதமன்றத்தில் நான்கு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் ஊர் ஜமாஅத்தினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் ஒரு தரப்பினராகவும் அதே ஊரைச் சேர்ந்த குறித்த அமைப்பின் ஐந்து பேர் இன்னொரு தரப்பினராகவும் இருப்பதோடு அந்தக் குறித்த நபர்கள் தங்களது மார்க்கக் கடமைகளை செயற்படுத்த இடம் கொடுக்கவில்லை என்று குறித்த அமைப்பினரே முதலில் மாதம்பை பொலிஸில் முறைப்பாடு செய்தமை இங்கு கவனிக்கத்தக்கது. அதுவே நீதிமன்றத்தில் வழக்காக பதியப்பட்டு பின்னர் அதில் தீர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்படி மாதம்பையில் உள்ள குறித்த சிலர் தங்களது மார்க்கத்தை பின்பற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதோடு ஜும்ஆ நடத்துவதாக இருந்தால் ஜும்ஆ நடத்துவதற்காக தெரிவு செய்யப்படும் இடம் அல்லது பள்ளிவாயல் குறித்த அமைச்சின் அனுமதி மற்றும் முறையான பதிவுபெற்று இருக்க வேண்டும் என நீதிமன்றம் ஏலவே உத்தரவிட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க 2015-07-31 ஆம் திகதியன்று குறித்த அந்த ஒரு சிலரும் வெளியிடங்களிலிருந்து வருகை தந்த SLTJ அமைப்பினர்களும் ஜும்ஆத் தொழுகையை நடத்த முற்பட்ட போது வழக்கு உத்தரவை கூறி ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணத்தினாலேயே பிணக்கு ஏற்பட்டு பொலிஸ் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேற்படி இந்த நிகழ்விற்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியிற்கும் தொடர்பு உண்டு என்று கூறுவதை  ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டிக்கிறது. எல்லா ஊர்களிலும் போலவே ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் இந்த ஊரிலும் உள்ளனர். எனினும் பிரச்சினைகள் ஊர்பொதுமக்கள் மற்றும் குறித்த அதே ஊரைச் சேர்ந்த 5 நபர்கள் சம்பந்தப்பட்டதே. ஜமாஅத்தே இஸ்லாமி இந்தப் பிரச்சினை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றி யாரையும் வழிநடாத்த வேண்டிய தேவையில்லை. காரணம் பிரச்சினைப்பட்டுக் கொண்டவர்கள் எமது கட்டுப்பாட்டில் உள்ளவர்களல்ல.
நடைபெற்ற வழக்குகளிலும் கூட ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு தரப்பு என்று பதியப்படவோ சுட்டிக்காட்டப்படவோ இல்லை.
சமூக ஊடகங்களில் கருத்துரைப்பவர்கள் உண்மைகளை அறிந்து நடப்புகளை விளங்கி கருத்துரைக்குமாறு பண்போடு கேட்டுக் கொள்கின்றோம். தயவு செய்து வீண் பழிகளையும் அபாண்டங்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் எம்மனைவரையும் அவனது பாதையில் ஸ்திரப்படுத்துவானாக!
ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி



 
Top