GuidePedia

ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை நடத்தப்படவுள்ளது.
ஆரம்பிக்கப்படவுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் பொலிஸாரின் வசதி கருதியே தபால் மூல வாக்களிப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதன்படி பொலிஸ் நிலையங்களிலும் வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் தேசிய பாடசாலைகளிலும் இன்று தபால்மூல வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தபால் மூல வாக்காளர்களின் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில் சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையத்திற்கு அலுவலக நேரத்திற்குள் சென்று அச்சமின்றி வாக்களிக்கலாமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை, தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெறுவதற்கு தடைகளை ஏற்படுத்துவதற்கோ அல்லது வாக்காளர்களை வற்புறுத்தவோ முயற்சித்தால் அவ்விடத்தில் வாக்கெடுப்பு உடனடியாக ரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பில் அடையாளமிடும் சந்தர்ப்பங்களைக் கண்காணிப்பதற்காக ஒவ்வோர் அத்தாட்சிப்படுத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கும் அரசியற் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு சார்பில் ஒவ்வொரு முகவர் வீதமும் கண்காணிப்பு நிறுவனமொன்று சார்பாக ஒரு கண்காணிப்பாளரையும் நியமிக்க தேர்தல்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பெப்ரல். சி. எம். இ, வி. மற்றும் கபே ஆகிய நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் வேட்பாளர்களின் உருவப்படம். அடையாளம் அல்லது சின்னத்தை காட்சிக்கு வைத்தல், வாக்கை இரந்து கேட்டல் வேட்பாளரொருவருக்கு வாக்களிக்க வேண்டாமென இரந்து கேட்டல், அடையாளமிடப்பட்ட அல்லது அடையாளமிடப்படாத வாக்குச் சீட்டை வெளியில் எடுத்துச் செல்லல் அல்லது முயற்சித்தல், அடையாளமிடப்பட்ட வாக்குச்சீடடை பிறருக்கு காண்பித்தல், காட்டுமாறு பிறரை வற்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்களாகும்.
உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு ஆகஸ்ட் 05 மற்றும் 06ம் திகதிகளில் நடத்தப்படும் இதேவேளை, தேர்தல்கள் திணைக்கள அலுவலர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 08ம் திகதி நடைபெறும்.
இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு 5 லட்சத்து 66 ஆயிரத்து 823 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அதேவேளை, 62 ஆயிரத்து 102 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 



 
Top