கடந்த 1993ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியால் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. இந்த முறை எப்படியாவது டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட வேண்டுமென்ற முனைப்பில் இந்திய அணி, இலங்கை வந்து இறங்கியிருக்கிறது.
இலங்கைக்கு எதிரான தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், '' 5 பவுலர்களுடன் விளையாடி எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் வெற்றியை நோக்கி செல்ல உதவும். அஸ்வின், புவனேஷ் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களால் பின்வரிசையில் சிறந்த பேட்டிங் பங்களிப்பையும் தர முடியும். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் சராசரி 40. எனவே அவரை நமது அணியின் ஆல்ரவுண்டராக கொள்ளலாம்.
ராகுல் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஷிகர் தவான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் ஷிகர் தவான் இடத்தில் ராகுல் வந்தார். பின்னர் தவானும் தவறுகளை திருத்திக் கொண்டு திறமையை காட்ட ஆரம்பித்தார். இப்போது விஜயும் சீரான முறையில் விளையாடுகிறார். அதனால் தொடக்க வீரராக இறங்குவதற்கு கொஞ்சம் போட்டி இருக்கத்தான் செய்கிறது.
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும் அபாயகரமான வீரர்தான். எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் திறன் ரோகித்துக்கு உண்டு. எனவே ரோஹித்துக்கு அதிக வாய்ப்பு வழங்குவது அவசியமாகிறது. ரோகித் 3-ம் விக்கெட்டாக களமிறங்கினால் நடுகளம் வலுவடையும் '' என்றார்.
சென்னையில் பயிற்சி பெற்றது பற்றி குறிப்பிட்ட கோலி, '' “சுழற்பந்து வீச்சை கடினமான பிட்சில் ஆடி பயிற்சி பெற விரும்பினேன், அதனால்தான் சென்னையில் இந்தியா 'ஏ' அணிக்காக ஆடினேன். பந்துகளை 'ஸ்வீப்' செய்வதில் எனக்கு மேம்பாடு வேண்டும். ஆஸ்திரேலியாவில் நிறைய ஆடினேன், ஆனால் ஸ்பின்னுக்கு ஆதரவான ஆடுகளத்தில் ஸ்வீப் செய்வது ஒரு சவால். ராகுல் டிராவிட்டும் அந்தப் போட்டியில் எனது தவறுகளைச் எடுத்து சொன்னார் '' என்றார்