மாதம்பையில் 31.07.2015 தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மீது அத்துமீறிய ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியினர் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட ஊடக அறிக்கைக்கு பதிலாக 03.08.2015 அன்று ஜமாத்தே இஸ்லாமிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க பதிலாகவே இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது.
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மாத்திரமே நாம் பின்பற்றத் தகுதியானவை இவை தவிர்ந்த எந்தவொன்றும் பின்பற்றுவதற்கு தகுதியற்றது எனும் தூய கொள்கையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற ஏகத்துவப் பிரச்சாரத்தை கடந்த 2006ம் ஆண்டு முதல் மாதம்பை தவ்ஹீத் சகோதரர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் குறித்த பிரச்சாரத்தை முடக்கும் விதமான பல பிரச்சினைகளை அங்குள்ள ஜமாத்தே இஸ்லாமி கிளை நிர்வாகம் கச்சிதமாக முன்னெடுத்து வந்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த 07.02.2014 அன்று தவ்ஹீத் சகோதரர்கள் ஜும்ஆ தொழுகை நடத்திய வேலை, மாதம்பையை சேர்ந்த ஜமாத்தே இஸ்லாமியினர் ஜும்ஆ தொழுகைக்கு கூட செல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த அல்-குர்ஆன் பிரதிகள் மற்றும் தஃவா செயல்பாட்டு சாதனங்கள் என்பவற்றையெல்லாம் அடித்து நொறுக்கி தீ வைத்தார்கள். ஊருக்குள் இரண்டு பள்ளிகள் வேண்டாம் என்ற கோஷத்துடன் பெண்களை பாதையில் இறக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதன் பின்னர் நடைபெற்று வந்த வழக்கு விசாரனைகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தமது செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு தாராள அனுமதியுண்டு என்று நீதி மன்றம் தெளிவான தீர்பை அளித்தது. இதனை எதிர்த்து 03 முறை ஜமாத்தே இஸ்லாமி பள்ளி நிர்வாகத்தினால் மனுத் தாக்கல் செய்யப்பட்ட போதும், 03 முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது என்று நீதி மன்றம் தெளிவாக தீர்பளித்து விட்டது.
நீதி மன்றத்தின் தெளிவான தீர்ப்பின் பின்னரே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மீண்டும் ஜும்ஆதொழுகை நடத்துவதற்கு தயாராகி கடந்த 31.07.2015 அன்று அதற்குறிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.
மீண்டும் ஜும்ஆ தொழுகையை நடத்த விடாது தடுப்பதற்கு திட்டமிட்ட ஜமாத்தே இஸ்லாமியினர் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் அமையப் பெற்றுள்ள தவ்ஹீத் மர்கசுக்கு முன் திரண்டு தொழுகைக்கு வரும் சகோதரர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள்.
கிளைக் காரியாளயத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட தவ்ஹீத் சகோதரர் ஒருவர் மீது அத்துமீறி தாக்குதலும் நடத்தினார்..
ஊருக்குள் இரண்டு பள்ளி வேண்டாம் என்று கோஷமிடும் ஜமாத்தே இஸ்லாமியும், அவர்களைச் சார்ந்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை தொழுகை நடத்த விடாமல் தடுத்து அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியது மாத்திரமன்றி, அன்றைய தினம் (31.07.2015) ஜும்ஆவுக்கு பள்ளிக்குக் கூட செல்லாமல் பாதையிலேயே அமர்ந்திருந்து தவ்ஹீத் சகோதரர்களின் தொழுகையைக் கெடுத்தவர்கள் இவர்கள்.
ஊருக்குள் இரண்டு பள்ளிகள் வேண்டாம் என்பவர்கள் பாதையில், பக்கத்தில் பள்ளியை வைத்துக் கொண்டு ஜும்ஆவுக்கு செல்லாமல் பாதையில் காத்திருந்த்தற்கு ஆதாரங்கள் எந்த மார்க்கத்தில் உள்ளது? ஜமாத்தே இஸ்லாமியினர் விளக்குவார்களா?
குழந்தையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் வேலையைப் பார்க்கும் ஜமாத்தே இஸ்லாமியினர் மாதம்பையில் நடைபெரும் சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பது நகைப்புக்குறியதாகும்.
அங்குள்ள பள்ளிவாயல் ஜமாத்தே இஸ்லாமியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அந்தப் பள்ளியில் வேறு எந்த ஜமாத்தினரும் மார்க்க கடமைகளை முன்னெடுக்க முடியாது.
நிலைமை இவ்வாறிருக்க, நடைபெற்று வரும் செயல்பாடுகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் அப்பாவிகள் என்ற தோரனையில் ஜமாத்தே இஸ்லாமி விடுத்துள்ள அறிக்கை கேளிக் கூத்தானதாகும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான தாக்குதல் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் பள்ளி நிர்வாகம் சேர்க்கப்பட்டுள்ளதை ஜமாத்தே இஸ்லாமியும் தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. குறித்த பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் யாரும் உங்கள் ஜமாஅத் அங்கத்தவர்களோ, கிளை நிர்வாகிகளோ அல்ல என்று உங்களால் கூற முடியுமா?
வழக்கில் தொடர்பு பட்ட சுமார் 35 நபர்களுக்கு கடந்த மாதம் சிலாபம் நீதவான் நீதிமன்றம் கைது செய்து ஆணை பிறப்பித்தது. இதில் உங்கள் அங்கத்தவர்கள் யாரும் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்கள் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? அறிக்கைக்காக பொய் சொல்லி அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
மாதம்பை ஜமாத்தே இஸ்லாமியின் “குட்டி மதீனா” என்று உங்களுக்கு நீங்களே வைத்துக் கொண்டுள்ள நாமத்தைப் பாதுகாக்க ஆடும் ஆட்டத்தை ஏதோ அங்குள்ள ஐந்து பேருக்கு எதிரான ஊர் மக்களின் செயல்பாடு போல் பாசாங்கு செய்ய முற்படுவது முழுப் பூசனியையும் சோற்றுக்குள் மறைப்பதற்கு முற்படுவதற்கு சமானமானதாகும்.
இஸ்லாமிய அமைப்பு என்று தங்களுக்கு நாமம் சூட்டியுள்ள ஜமாஅதே இஸ்லாமியினர் தங்களது ஊடக அறிக்கையில் இஸ்லாம் தடுத்த பொய்யையும் புரட்டையும் தாராளமாக எழுதித் தீர்த்திருப்பதை பொது மக்களுக்கு அடையாளப்படுத்துவதும் எமது கடமையென கருதுகின்றோம்.
#பொய் ஒன்று
/////மாதம்பையில் இருக்கின்ற SLTJ ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கும் ஊர் ஜமாஅத்தினருக்குமிடையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஜமாஅத்தே இஸ்லாமியோடு தொடர்புபடுத்துவதற்கு SLTJ ஐச் சேர்ந்தவர்கள் பெரும் முயற்சி செய்கின்றனர். ஜமாஅத்தே இஸ்லாமி அதனை முற்றாக மறுக்கின்றது. மாதம்பையில் நடந்துவரும் சர்ச்சைகளுக்குரிய முழுப் பொறுப்பையும் SLTJ தான் ஏற்க வேண்டும் என்பதை ஊர் மக்கள் தெளிவாகச் சொல்கின்றனர்.”///////
இப்படி சொல்வதன் மூலம் ஜமாஅதே இஸ்லாமி செய்யும் பெருமுயற்சி என்ன தெரியுமா?
மாதம்பையில் SLTJயை சேர்ந்தவர்கள் வெறும் 5 பேர் என்று பொய்யாக உலகத்தை நம்பவைப்பது.
மாதப்பையில் பள்ளியை உடைத்து குழப்பம் செய்த ஜமாஅதே இஸ்லாமிய உறுப்பினர்கள் ஊர் ஜமாஅத்தினரே தவிர ஜமாஅதே இஸ்லாமி உறுப்பினர் அல்ல என்று உலகத்தை நம்ப வைப்பதற்கு முயற்சிப்பது.
ஜமாத்தே இஸ்லாமியனரின் அடாவடித் தனத்தினால் அடி வாங்கியவர்களின் சொந்த ஊர் மாதம்பையாக இருந்தாலும் அவர்களை மாதம்பையோடு தொடர்பு படுத்தாமல் SLTJ உறுப்பினர் என்று குறிப்பிட்டு சொல்லி ஏதோ வெளியில் இருந்து வந்து ஊருக்குள் குழப்பம் செய்ய எத்தணிப்பவர்கள் போன்று சித்தரிப்பது.
உலக சர்ச்சைகளை எல்லாம் ஆராயும் நாடகத்துறை தமது தலைநகர சர்ச்சையை தாமே ஆராய்ந்ததாக சொல்ல தைரியம் இல்லாமல் பிரச்சினைக்குக் காரணம் SLTJ என்று ஊரார் சொல்வதாக பொய் சொல்கின்றமை.
பிரச்சினையை ஜமாஅதே இஸ்லாமியோடு தொடர்பு படுத்துவதை ஜமாஅதே இஸ்லாமி முற்றாக மறுக்கின்றது என்று சொல்லி விட்டு, அப்படி மறுக்க காரணம் ஊர் ஜமாஅத்தார் இப்படி சொல்கின்றார்கள் என்று சொல்வதிலிருந்தே பூனைக் குட்டி வெளியில் வந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
ஜமாஅதே இஸ்லாமி என்பது ஒரு பொறுப்புள்ள அமைப்பு எனில், உங்களுக்கும் பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லை என்பது உண்மை(?) எனில், உங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் “குட்டி மதீனா” என்று சிலாகிக்கப்படும் ஊருக்குள் இடம்பெற்ற ஓர் அசம்பாவிதத்தின் போது நியாயவான்களாக இருந்தால் எப்படி அனுகியிருக்க வேண்டும்? இரு பக்க அன்பர்களையும் விசாரித்து, கருத்தாடல் செய்து யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை பிரச்சினை ஆரம்பித்தபோதே பகிரங்கமாக அறிவித்திருக்க வேண்டும்.
பிரச்சார உரிமையென்பது அனைவருக்கும் உரியது. அது குறிப்பிட்ட ஓர் அமைப்புக்கும் மட்டும் தான் என்று வாதிடுவதும், எதிர் தரப்பின் பிரச்சாரத்தை தடுப்பதற்காக சிக்கள்களை உண்டாக்குவதும், மாற்றுக் கருத்துள்ளவர்களின் மர்கஸினை தாக்கி சேதப்படுத்துவதும் மார்க்கம் தடுத்த மகா பாவங்கள் என்பதை மாதம்பை வாழ் மக்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்தியிருத்தல் வேண்டும்.
இதனை நீங்கள் செய்தீர்களா? இரு பக்க கருத்தை விசாரித்தீர்களா? செய்ய வேண்டியதை செய்யாது யார் அத்துமீறி அராஜகம் புரிந்தார்களோ அந்த மக்கள் சொல்கிறார்களாம் “SLTJ தான் பிரச்சினையை பொறுப்பெடுக்க வேண்டும்” என்று அநியாயத்திற்கு ஆதரவாக ஒருபக்கச் சார்பாய் அறிக்கைவிட்டிருப்பது உங்களது கடைந்தெடுத்த கயமைத்தனத்தை காட்டவில்லையா?
அடுத்து, மாதம்பை என்பது எப்படிப்பட்ட ஊர்? அதற்கும் ஜமாஅதே இஸ்லாமிக்குமுள்ள தொடர்பு எப்படிப்பட்டது என்பதை நாசூக்காக மறைத்துள்ளதை தெளிவாக காணமுடிகிறது. ஜமாஅதே இஸ்லாமியினரே! நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஊர்களை A+, A-, B+, B-, C+, C-, E என்ற அடிப்படையில் தரம்பிரித்து வைத்துள்ளீர்களா இல்லையா? அதில் மாதம்பை என்பது A என்ற தரப்படுத்தலில் வருகிறதா இல்லையா? ஒரு ஊரின் முழுமையான கட்டுப்பாடு ஜமாஅதே இஸ்லாமியின் கரங்களுக்கு வரும் பட்சத்தில் தானே A என்ற தரப்படுத்தலில் அந்த ஊரை இணைப்பீர்கள்? மாதம்பை என்பதும் உங்கள் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள ஊர் என்பதை தானே உங்கள் தரப்படுத்தலே காட்டுகிறது?
இந்தளவுக்கு உங்கள் ஆதிக்கம் நிறைந்த ஊரில், பாலர் பாடசாலை, அஸாபீருள் இஸ்லாம் சிறார் பிரிவு, ஜம்மியதுத் தலபா மாணவர் பிரிவு, ஜம்மியதுத் தாலிபாத் மாணவியர் பிரிவு, பள்ளி நிர்வாகம், இஸ்லாஹியா அரபுக் கல்லூரி, IIIT நிறுவனம் என்று மொத்தமாய் உங்கள் பணிகளும் ஆதிக்கம் உள்ள ஊரில், பெரும்பாலான ஊர் மக்கள் (உங்கள் பார்வையில்) ஒன்று திரண்டு ஒரு மர்கஸை தாக்குகிறார்கள், காடைத்தனம் புரிகிறார்கள், தொழுகையாளிகளுக்கும் தாயிகளுக்கும் அடிக்கிறார்கள், பொதுபலசேனா பாணியில் “பள்ளி வேண்டாம்“ என்று பெண்களை வைத்து ஆர்ப்பாட்டமே நடத்துகிறார்கள், தொடுக்கப்படும் வழக்கை கூட உங்கள் அங்கத்தவர்களால் நடாத்தப்படும் பள்ளி நிர்வாகிகளே எதிர்கொள்கிறார்கள், உங்கள் தாயிகளான உவைஸ் இஸ்லாஹி போன்றவர்கள் நீதிமன்றம் வரை படி ஏறுகிறார்கள்… இவ்வளவுக்குப் பின்பும் ஊரில் என்ன நடந்தது என்பதே பொது மக்கள் சொல்லித் தான் எமக்குத் தெரியும் என்பதும், எமக்கும் இப்பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் வடிகட்டிய சந்தர்ப்பவாத பச்சைப் பொய் என்பது உங்கள் மனசாட்சிக்கே உறுத்தவில்லையா?
அப்படியென்றால், மாதம்பையில் உங்கள் ஆதிக்கம் இல்லை என்கிறீர்களா? பள்ளிவாசல் தப்லீக் ஜமாஅத்தினுடையது என்று சொல்லப்போகிறீர்களா? உவைஸ் இஸ்லாஹி உங்கள் தாயி இல்லை என்கிறீர்களா? ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களிலும் பெண்களிலும் உங்கள் அங்கத்தவர்களே இல்லை என்கிறீர்களா? நீங்கள் எதை சொன்னாலும் அதனை எட்டி உதைக்கும் அளவுக்கு ஜமாஅதே இஸ்லாமி செல்லாக்காசாக மாதம்பையில் மாறிவிட்டது என்கிறீர்களா? வார்த்தைக்கு நூறு தடவை “தூய தேசம்”, “குட்டி மதீனா” என்று புகழாரம் சூட்டப்பட்ட மாதம்பை அதன் தூய்மையை இழந்து விடும் அளவுக்கு உங்கள் தர்பியத்தில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறீர்களா? … யாருடைய காதில் பூ சுற்ற பார்க்கிறீர்கள்?
#பொய் இரண்டு
/////பிரச்சினையின் சுருக்கம் 2013 யில் இருந்து ஐந்து SLTJ ஆதரவாளர்கள் இன்னும் சில வெளியூர் ஆதரவாளர்களையும் சேர்த்துக் கொண்டு ஐங்காலத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகை போன்றவற்றை வீடுகளில் நடத்த முயற்சித்துள்ளனர். இதன் விளைவாகவே ஊரின் அதிருப்தியை அவர்கள் சம்பாதித்துள்ளனர்./////
ஜமாத்தே இஸ்லாமியின் வடிகட்டிய பொய்களில் இதுவும் முக்கியமானதாகும். மாதம்பையில் பிரச்சினைக்கே காரணம் 2013ம் ஆண்டு முதல் 5 பேர் சேர்ந்து கொண்டு ஐங்காலத் தொழுகையும், ஜூம்ஆவும் ஆரம்பித்தது தான் என்று பச்சையாக புளுகியுள்ளதை என்னவென்பது?
மாதம்பை பிரச்சினை என்பது 2013ம் ஆண்டு தான் ஆரம்பித்ததா? இல்லை.
2006 ஆம் ஆண்டு முதல் மாதம்பையில் தவ்ஹீத் பிரச்சாரம் தடுக்கப்பட்டே வந்துள்ளது என்பதே உண்மை. இவர்கள் தற்போது எந்த 5 நபர்களை பிரச்சினையாக காட்டப்பார்க்கின்றார்களோ இவர்களில் எவரும் 2006 ஆம் ஆண்டு தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக பெண்களுக்கான மார்க்க வகுப்பினை நடாத்துவதற்காக எமது தாயிகள் வந்த போது அதனை செய்யவிடாது அன்று தடுத்த கலாம் மவ்லவி யார்?
நிகழ்ச்சியை தடுத்தது எப்படி நியாயம் என்று உங்கள் அமீர் ஹஜ்ஜூல் அக்பருடன் போனில் நியாயம் கேட்ட போது “திருமணம் முடிக்காதவர்கள் பெண்கள் பயான் நடாத்துவதை ஜமாஅதே இஸ்லாமி அனுமதிப்பதில்லை“ என்று அவர் பதில் தந்தவுடன் “இந்த நிபந்தனை உங்கள் அங்கத்தவர்களை தான் கட்டுப்படுத்தும் எங்களையல்ல. அல்லாஹ்வின் தூதர் போடாத சட்டத்தை நீங்கள் எப்படி போடலாம்?“ என்று எதிர்கேள்வி கேட்டவுடன் கோபப்பட்டு அவர் பொறிந்து தள்ளியதும் எமது நிகழ்ச்சியை செய்யவிடாது ஆக்கியதும் யார்?
அன்று யாரும் தொழுகை நடாத்தவில்லையே? ஜூம்ஆ நடாத்தவில்லையே? மார்க்கத்தை சொல்ல வந்தபோது தானே உங்கள் அமீர் அதனை தடுத்தார்? உங்கள் வாதப்படியே 2013 இல் தொழுகை ஆரம்பித்தது தான் பிரச்சினைக்கு காரணம் எனில் 2006 இல் உங்கள் அமீர் தடுத்ததற்கு எது காரணம்? ஜமாஅதே இஸ்லாமியை தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் மாதம்பைக்குள் காலூன்றி விடக் கூடாது என்பதை தாண்டி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
அடுத்து, உங்களது இந்த அறிக்கை மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரு ஊருக்குள்ளே இரு பள்ளிகள் வரக்கூடாது என்கிறீர்களா? இதற்கு மார்க்க ரீதியாக ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? அல்லது 5 பேர் சேர்ந்து தொழுகையோ - ஜூம்ஆவோ நடாத்த முடியாது என்கிறீர்களா? இதற்கு மார்க்க ரீதியாக என்ன ஆதாரம்?
சரி, உங்கள் கூற்றில் நீங்களாவது நியாயமாக நடக்கிறீர்களா? நுவரெலியாவில் பள்ளிக்குள் வைத்து உங்கள் ஜமாஅத் உறுப்பினர்களை ஒரு சிலர் அடித்ததை அல்ஹஸனாத்தில் கட்டுரையாக எழுதி ஆத்திரத்தை கொட்டி நியாயம் கேட்டீர்களே?
புளிச்சாக்குளத்தில் உங்கள் உலமாக்கள் பயான் செய்யப் போய் வாங்கிக் கட்டியதை கண்டித்து பேசினீர்களே?
சிலாபம் சோனகத்தெரு பள்ளியில் நோன்பு காலத்தில் கூட சண்டை பிடித்தீர்களே?
தனியாக மர்கஸை சிலாபத்தில் கட்டி இரவுத் தொழுகைகளையும், அவ்வப்போது கடமையான தொழுகைகளையும் இன்று வரை நடாத்தி வருகின்றீர்களே?
இது போன்று என்னற்ற இடங்களில் நீங்களே தொழுதும், மர்கஸ் நிர்மாணித்தும், தஃவா செய்தும் வரும் போது, அவற்றை நியாயம் காணும் நீங்கள் வெளியூர்களில் நீங்கள் செய்த அதே பணிகளை மாதம்பையில் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் போது எதிர்ப்பை காட்டுவதும் காடைத்தனம் புரிவதும் எப்படி நியாயமாக முடியும்?
#பொய் மூன்று
////இந்த தீர்ப்பின் படி மாதம்பையில் உள்ள குறித்த சிலர் தங்களது மார்க்கத்தை பின்பற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதோடு ஜும்ஆ தொழுகை நடத்துவதாக இருந்தால் ஜும்ஆ தொழுவதற்காக தெரிவு செய்யப்படும் இடம் அல்லது பள்ளிவாயல் குறித்து அமைச்சின் அனுமதி மற்றும் முறையான பதிவு பெற்று இருக்க வேண்டும் என நீதிமன்றம் ஏலவே உத்தரவிட்டுள்ளது”////
மார்க்கத்தை பின்பற்ற எவ்வித தடையும் இல்லை என்று தீர்பளித்த்து உண்மை தான். ஆனால் ஜும்ஆ தொழுவதாக இருந்தால் ஜும்ஆ தொழுவதற்காக தெரிவு செய்யப்படும் இடம் அல்லது பள்ளிவாயல் குறித்து அமைச்சின் அனுமதி மற்றும் முறையான பதிவு பெற்று இருக்க வேண்டும் என்று எப்போது தீர்ப்பு வழங்கப்பட்டது? அந்த தீர்ப்பை ஜமாத்தே இஸ்லாமியினர் எடுத்துக் காட்டுவதார்களா? 20.02.2014ம் திகதி இலக்கும் 66533 எனும் தீர்ப்பில் ஜும்ஆ தொழுகை நடத்த வேண்டாம் என்று எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இது வடி கட்டிய பொய்யாகும்.
21.02.2014ம் அன்று ஜும்ஆவுக்காக திரளும் இரண்டு தரப்பினருக்கும் போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தான் கட்டைளையிடப்பட்டது. எனவே நீதி மன்றம் ஜும்ஆ தொழுகைக்கு தடை விதிக்கவில்லை என்பது மிகவும் தெளிவானது. இதை ஜமாத்தே இஸ்லாமியினர் மறைப்பது ஏன்? கடிவாளம் போட்டு கட்டப்பட்டிருக்கும் தனது தொண்டர்களை தக்கவைத்துக் கொள்ளவா? அல்லது நீதி மன்ற தீர்ப்பைக் கூட வாசித்து புரிய முடியாத பலவீனர்கள் தான் உங்கள் அமைப்பை வழிநடாத்துகிறார்களா?
அல்லது உங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதனால் தீர்ப்பின் பிரதியை எரித்து விட்டீர்களா?
பொது மக்கள் புரிந்துக் கொள்வதற்காக உண்மையை அறிந்துக் கொள்வதற்காக இதோ அந்த தீர்ப்பின் முக்கிய பகுதி.
பொது மக்களை தூண்டி விட்டு கைகட்டிப் பார்க்கும் காரியத்தில் ஈடுபடும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் கபடத் தனத்தை தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுமாறும் அடிவடித்தனங்களையும் அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டு அப்பாவித்தனமாக ஜமாத்தே இஸ்லாமியை நம்பிக் கொண்டிருக்கும் பொது மக்களை பகடு காயாக பயன்படுத்தி ஏமாற்றாமல் இருக்குமாறும் மிகவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.
அவ்வாறு இல்லாமல் பழைய பாணியில் ஜமாத்தே இஸ்லாமி தலைமைகள் நடந்து கொண்டால் விரைவில் ஜமாத்தே இஸ்லாமியின் ஜனநாயக விரோத செயல்பாடுகள் தொடர்பான ஜனநாயக ரீதியிலான பதிலடியை உங்கள் தலைமையகம் பெற்றுக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
ஊடகப் பிரிவு