GuidePedia

சுயநல அரசியலுக்காக புனித அல்-குர்ஆனையோ அல்லது இஸ்லாம் மதத்தினையோ பயன்படுத்த வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் முன்மொழியப்பட்டுள்ள பிரபல தொழிலதிபரான வை.எம்.இப்றாஹீம் ஹாஜியார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜியார், அவரது அரசியலுக்காக புனித அல்-குர்ஆனையும், இஸ்லாம் மதத்தினையும் மிகத் தீவிரமாக பயன்படுத்தி கொச்சைப்படுத்தி வருகின்றார். அவரை தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை என்று அவர் நினைக்கக்கூடாது. இது தொடர்பில் ஒரு கழுதை அல்லது ஒரு முட்டாள் பேசுகின்றான் என எமது சமூகம் மௌனியாக இருக்கலாம்.
ஆனால் அதை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இப்படியான பேச்சுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜியார் உடனடியா நிறுத்த வேண்டும். அவரின் அரசியலுக்காக அஸ்வர் ஹாஜியார் எதனையும் பேச முடியும். ஆனால் அவர் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மிக வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
நான் கூறவில்லை, மஹிந்த கூறவில்லை, அல்-குர்ஆன் கூறியதாக அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார மேடையில் அஸ்வர் ஹாஜியார் கூறிய விடயம், எமக்கு பள்ளிவாசல்களை உடைக்கும் போது இருந்த மன அழுத்தத்தினை விட மிகவும் சுக்குநூறாக மனம் உடைந்துவிட்டது. 
புனித அல்-குர்ஆனுக்கு விளக்கம் கூற ஆயிரக்கணக்கான உலமாக்களும், முப்திமார்களும் நாட்டிலுள்ளனர்.

அதைவிடுத்து, நீங்கள் எல்லாம், குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க முடியாது. நீங்கள் அரசியலுக்கு வந்த வழியையும், உண்ட உணவையும், நீங்கள் இருந்த நிலையையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்" என்றார். 



 
Top