(எஸ்.அஷ்ரப்கான்)
தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு ஆரம்பித்த முஸ்லிம்களின் அவலம் 15 ஆண்டுகளாக தொடர்கிறது. முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் எம்மை அர்ப்பணித்து செலாற்றுவோம். எமது கைகளைப் பலப்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் அன்மையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கல்முனை அரசியல்வாதிக்கு நான் ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் என்னோடு விவாதிக்க ஒரு மேடைக்கு வாருங்கள். நான் கூறுகின்ற குற்றச்சாட்டுக்கள் மக்களின் இன்றைய நிலைப்பாடு பற்றி பெரிய விவாதம் ஒன்றை நடாத்துவோம். மக்கள் தெளிவடையட்டும். அதை விட்டுவிட்டு எங்களை பேசவிடாமல் தடுப்பது, கூக்குரலிடுவது எல்லாம் ஜனநாயக அரசியல் அல்ல. இது உங்கள் வங்குரோத்து அரசியலாகும்.
கல்முனை மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். நானும் இங்குள்ள மக்களைப்போன்று பள்ளிவாசல்களிலும், தெருவோரங்களிலும், பாடசாலைகளிலும் அங்கலாய்த்து கொண்டு எமது மக்களுக்கும், பிரதேசத்திற்கும் விடிவு காலம் வராதா ? என்று ஏங்கிக் கொண்டுதான் நானும் இருந்தேன். அந்த ஏக்கத்தின் விளைவுதான் இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்காக தனது உயிரையே தியாகம் செய்து மக்கள் பணி செய்யும் ஒரு தலைமையின் கீழ் எமது பிரதேச மக்களுக்காக சேவையாற்ற முன்வந்துள்ளேன். இதற்காக மக்கள் எமது கைகளை பலப்படுத்த வேண்டும்.
மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் 85 களில் ஆரம்பித்த போராட்டம் வீறுநடை போட்டு எழுந்து வந்து அரநாயக்காவில் மறைகின்ற வரை சிறப்பாக எமது விடுதலைப்பயணம் சென்றது. ஆனால் அவரின் மறைவிற்குப்பிறகு ஆரம்பிக்கிறது முஸ்லிம் சமூகத்தின் அவலக் குரல் இன்றுவரை அது நீடிக்கிறது. தலைமை மறைந்து 15 வருடங்களுக்கும் நாம் கண்ட அபிவிருத்திதான் என்ன ? உரிமைகள் பெற்றுத்தரப்பட்டிருக்கின்றனவா ? நிம்மதியாக சமயக்கடமைகள் செய்ய வழி ஏற்பட்டதா ? பிறந்த மண்ணில் அச்சமற்றவர்களாக வாழத்தான் முடிந்ததா ? என்றால் எமக்கு பாராளுமன்ற கதிரைகளை அலங்கரிப்பதற்கு எமக்கு பிரதிநிதிகள் தேவையா ? இப்போதுள்ள மு.கா. வினர் அதைத்தான் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை மக்கள் விளங்கியதன் விளைவே இன்று நாம் அரசியலுக்கு வர காரணமாகும். எமக்கு அதிகாரம் கிடைத்தால் உண்மையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவருவதோடு பெரும் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்வதே எமகு நோக்கமாகும்.
இமாம் கொமெய்னி ஒரு சிறந்த சிந்தனையை சொன்னார். முஸ்லிம் நாடுகள் ஒற்றுமைப்பட்டு ஒரு வாளித் தண்ணீரை எடுத்து இஸ்ரவேல் மீது ஊற்றுவோமாக இருந்தால் அந்நாடு அப்படியே கரைந்து கடலுக்குள் ஓடிவிடும். எம்மிடம் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நமது முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லாமலேதான் இருக்கின்றோம்.
உலகில் ஒரு பிரபல்யமான மொஸாட் அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பு சுமார் 7 முஸ்லிம் நாடுகளை பிரித்தாழுகின்றது. குண்டு மழை பொழிகின்றது. அநியாயமாக எமது சகோதரர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள். அந்த நிலைதான் இங்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தயவு செய்து சிந்தித்து செயற்படுங்கள்.
எமது பிரதேசத்தில் 15 வருடகாலத்திற்கும் ஒரு வருடத்திற்கு ஒரு வீதியை செப்பனிட்டிருந்தால் கூட எமது பிரதேச வீதிகள் செப்பனிடப்பட்டிருக்கும். ஏன இந்த அவல நிலை. எனவே மக்கள் இத்தேர்தலை தீர்வு வழங்கும் ஒன்றாக பயன்படுத்துங்கள்.
நிச்சயமாக இதனை நான் ஒரு சவாலாகவே ஏற்றுள்ளேன். அபிவிருத்தியில் பின்தங்கியிருக்கும் கல்முனை மாநகரை அபிவிருத்தி செய்வதற்கு முன்னைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்த தவறியுள்ளதால் மக்கள் மாற்றத்தை எதிர்பாரக்கின்றார்கள். எமக்கு ஒரு வாய்ப்பு தந்தால் அதனை சாதித்துக்காட்ட எம்மிடம் முன்மொழிவுகள் உள்ளன. இன்று பார்த்தால் கல்முனை மாநகரம் வெட்கமாக உள்ளது இதனை குறிப்பிடுவதற்கு, கல்முனை மா நகரம் எந்தவித அபிவிருத்தியும் இல்லாமல் ஒரு சோக மயமான நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நாம் அபிவிருத்தி தாகத்தை எமது கட்சியின் ஊடாக கொண்டு வருவோம். கல்முனை சந்தையை பாருங்கள், கல்முனை பொது நுாலகத்தை பாருங்கள், பஸ்தரிப்பு நிலையத்தை பாருங்கள் எல்லாம் அபிவிருத்திக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றது. இத்தனைக்கும் அதிகாரத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர் எல்லோரும் இருக்கின்றார்கள். ஆனால் அபிவிருத்தியில்லை.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா ? அபிவிருத்தி வேண்டுமா ? மக்கள் அச்சமற்றவர்களாக வாழ வேண்டுமா எமது தியாகக் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆதரியுங்கள். படித்தவர்களை துடிப்புள்ளவர்களை பாராளுமன்றில் மர்ஹூம் அஷ்ரப்போன்று முழங்குபவர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள் என்றும் குறிப்பிட்டார்.