(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம் லிபரல் கட்சியின் தேசியத்தலைவரும் கணக்காளருமான எம். இஸ்மாலெப்பை அவர்கள் இம்முறை பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். இவரது கொள்கைகள் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றிய தெளிவான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டினை அன்மையில் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் வெளியிட்டு வைத்தார்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் கூறியுள்ள கருத்துக்கள், விளக்கங்கள் தொடர்பான தொகுப்பினை இங்கு தருகின்றேன்.
நான் தற்போதைய அரசியல் நிலைவரங்களைப் பற்றி தங்களோடு எனது எண்ணக்கருக்களை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக எமது முஸ்லிம் மக்களின் இன்றைய அரசியல் கள நிலவரம்; மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானதாகவும், சுயநலம் கொண்டதாகவும், மக்களை ஏமாற்றி காய் நகர்த்தும் அரசியலுமாகவே காணப்படுகின்றது. மேலும் தான்தோன்றித்தனமான அரசியல் தலைமைத்துவங்கள் எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களோ, தூரநோக்கு சிந்தனையுள்ள அரசியல் சாணக்கியமோ அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். காலத்துக்கு காலம் நாம் எதிர்நோக்கும் தேர்தல்களில் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு தான்தோற்றித்தனமாய், தங்களது சுய இலாபத்துக்காக அவைகளைப் பயன்படுத்தி மக்களை புறந் தள்ளிவிடுகிறார்கள். மேலும் எமது மக்களும் அரசியல் துறையில் தங்களது பங்களிப்பை சரியான சிந்தனை இன்றி வழங்குவதால் அது பிழையானவர்களை தெரிவு செய்ய வாய்ப்பாக அமைகின்றது. அதே நேரம் மக்கள் புது முகங்களை தெரிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அது அவர்களின் பாராளுமன்ற தெரிவுக்கு பழையவர்கள் கட்சி மாறியவர்களாகவோ, தரம் கொண்டவர்களா கவோ இருந்தாலும் பழக்கதோசம் போல் அவர்கள் வாக்களித்து விடுகின்றார்கள். அது மட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்னமே தேசியப் பட்டியல் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களிடம் நாடகம் ஆடும் அரசியல்வாதிகளை கூட நீங்கள் அங்கீகரிக்கத் தவறுவதில்லை.
எனவேதான் இந்த தரங்கெட்ட அரசியலை நீங்கள் இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தலில் மாற்றியமைக்க வேண்டுமென்பதே எனது அவாவாகும்.
மேலும் முஸ்லிம்கள் செழிப்பாக வாழும் எமது பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் தலைமைத்துவம் இன்று கண்டிக்கு வலுக்கட்டாயமாக பறித்து எடுத்து செல்லப்பட்டதை எமது மக்கள் இன்றுவரை உணர்ந்தபாடில்லை. அவர்கள் எமது பிரதேசத்துக்கு எந்தவிதமான அக்கறையுமற்றவர்களாக காலத்தை கடத்துவதை மக்கள் உணரவில்லை. குறிப்பாக எமது சாய்ந்தமருது பிரதேச சபை விடயத்தைக் கூட ஒரு தலைவராகினும் தீர்த்து வைக்க முன்வரவில்லை. ஆனால் அவர்களுக்கு எமது பிரதேசத்தில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் அல்லது அதற்கு மேல் தேவை என்று கூக்குரலிடுகிறார்கள். எதை சாதிப்பதற்கு! மக்களே உணருங்கள்.
இம்முறை உங்களின் மாற்றமும், தலைமைத்துவத்தின் தேவையும் இத்தேர்தலில் பூதாகரமாக ஒலிக்கவேண்டும். மாற்றாந்தாய் தலைவர்களிடமிருந்து எமது பிரதேசத்தை இம்முறை மீட்டெடுங்கள். உங்கள் சொந்த மண்ணில் ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தி, நீங்கள் வெற்றிவாகை சூட இந்த பொதுத்தேர்தலை பயன்படுத்துங்கள். நாங்கள் கட்சியோடு காத்திருக்கிறோம்.
எமது பிரதேசத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், முஸ்லிம்களின் மொழி, இன, கலாசார உணர்வுகளை மீட்டெடுத்து எதற்கும் கையேந்தும் ஏழ்மை நிலையை மாற்றி தன்மானமிக்க முஸ்லிம் இனத்தை மீண்டும் உருவாக்கும் சுயமரியாதையை மீட்டெடுத்து எதிர்கால முஸ்லிம் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்க ஏற்ற வழியை உருவாக்கவும் கல்வி, மருத்துவம், விவசாயம், வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இழந்த எமது பெருமைகளை மீட்டெடுத்து எமது பிரதேசத்தை தலைநிமிரச் செய்வதுதான் முஸ்லிம் லிபரல் கட்சியின் நோக்கம் என்பதை தெளிவாக மக்கள் முன்வைக்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தூர நோக்கு தலைவர் எம். இஸ்மாலெவ்வை
எம். இஸ்மாலெவ்வை ஒரு சிரேஷ்ட கணக்காளரும் இலண்டன் சர்வதேச உயர் தொழில் நிறுவனத்தின் இணை உறுப்பினருமாவார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தீவிரமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதோடு கடந்த காலங்களில் தேசிய, பிராந்திய அரசியல் நிலவரங்களை உன்னித்துக் கவனித்து வருபவரும் ஆவார். தற்போதய சுயநலமிக்க, பதவி மோகம் கொண்ட , பிரதேச வாதம்மிக்க தலைவர்களால் மக்கள் தவறான வழியில் இட்டுச்செல்வதை அறிந்த எம்.இஸ்மாலெவ்வை முஸ்லிம் லிபரல் கட்சியை ஸ்தாபித்து மக்களை ஒரே குடையின் கீழ் இணைத்து தூரநோக்கு அரசியல், பொருளாதார திட்டமிடல்களை வகுத்து அதன் மூலம் மக்களை வழிநடத்த முயற்சி செய்கிறவர்.
எம்.இஸ்மாலெவ்வை மக்களை எழுச்சியடையச் செய்து சரியான முறையில் வழி நடத்த திடசங்கற்ப்பம் பூண்டு தன்னை அதற்காகவே அர்பணித்துள்ளார். உங்களின் ஆதரவை வழங்குவதன் மூலம் அவரோடு கைகோர்த்து உங்கள் சுதந்திர அரசியலை எதிர்காலத்தில் வெற்றிகரமாக வழிநடாத்திச்செல்லலாம் என்பது உறுதி.
அபிவிருத்தியே எங்கள் முதல் நோக்கு
பொருளாதார, சமூக அபிவிருத்தி :
1. எமது பிரதேசத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரண தர, உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கும், பட்டதாரி களுக்கும் ஒரு தொழில் வங்கியை நிறுவி அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்.
2. எமது பிரதேசத்தில் ஒரு கணனி (ஊழஅpரவநச) தொழில் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் எமது இளைஞர், யுவதிகளுக்கு கணனி கல்வி, தொடர்பாடல் துறைகளில் பயிற்சி அளிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்க ஏற்பாடு செய்தல்.
3. பல நோக்கு கூட்டுறவு துறையை பலப்படுத்துவதன்; மூலம் சிறிய, நடுத்தரமான விவசாயிகள், கடற்தொழி லாளர்கள், வர்த்தகர்களுக்கு உதவியளித்தல்.
4. சிறு கடன்களின் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்து அவர்களுக்கும், அவர்களது குடும்பத் தைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்வாதார உதவி யளித்தல்.
5. வீடுகள், தொடர்மாடிகளை அமைத்து வீட்டு வசதி அற்றவர்களுக்கு நீண்ட கால கடன் அடிப்படையில் வழங்க உதவி செய்தல்.
6. பாதைகள், பாலங்கள், வடிகான்கள், விளையாட்டு மைதானம் போன்றவற்றை புனரமைப்பு செய்வதன் மூலம் மக்களுக்கு பயன்படச் செய்தல்.
7. பாடசாலைகளின் பற்றாக்குறைகள், வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல்.
8. அஷ்ரப் வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்தில் முதல் தர வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுத்தல்.
9. சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையைப் பெற்றுக் கொடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
அரசியல் அதிகாரப் பகிர்வும், நிர்வாக மறுசீரமைப்பும்
கீழ்வரும் அரசியல் மறுசீரமைப்புகளுக்கு எமது கட்சி ஊக்கமளித்து ஆதரவளிக்கும்.
01. நிறைவேற்று ஜனாதிபதியை நாங்கள் ஆதரிக்கிறோம். அதில் முஸ்லிம், தமிழ் உதவி ஜனாதிபதிளை நியமிப்பது உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
02. பாராளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டதாக அமைவதை நாங்கள் ஆதரிக்கிறோம். அது உயர் சபை, கீழ் சபை என்பவை யாகும். இதன் மூலம் சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகள் உரிய முறையில் கையாள வழிவகுக்கும்.
03. தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் ஜனாதிபதியாலும் உப ஜனாதிபதிகளாலும் தெரிவு செய்யப்படவேண்டும். அவை மக்கள் செறிவின் அடிப்படையில் அமைய வேண்டும்.
04. வடக்கு மாகாணத்திற்கு தமிழ் ஆளுனரும், கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுனரும் நியமிக்கப்பட வேண்டும்.
05. காலந்தாழ்த்தாமல் தென்கிழக்கு மாகாணம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
06. ஒரு தேசிய பொருளாதார ஆணைக்குழு அமைப்பதன் மூலம் தேசிய பொருளாதார நடவடிக்கைகள் அரசியல் தலையீடு இன்றி நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
07. 15மூ வீதத்திற்கு கூடுதலான தமிழ், முஸ்லிம் மக்கள் வசிக்கும் மாவட்டங்களில் ஒரு மேலதிக அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டு அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும்.
08. அனைத்து அரசாங்க நியமனங்களும் சனத்தொகை விகிதாசாரத்திற்குள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
தலைவரின் கடந்தகால சேவைகள் சில
1. கல்முனையில் ‘றோயல் அக்கடமி’ என்ற ஆங்கில தொழிநுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆங்கில, தொழிநுட்ப கல்வியை வழங்கினார்.
2. ஏழை மாணவர்கட்கு இலவசமாக கல்வி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உதவி வழங்கினார்.
3. அஷ்ரப் வைத்தியசாலைக்கு ஓ-சுயல இயந்திரம் ஒன்றை தன் சொந்த செலவில் கையளித்தார்.
4. சம்மாந்துறை அல்-ஹம்றா பாடசாலையின் தண்ணீர் குறைபாடு அறிந்து தனது சொந்தச் செலவில் 1000 லீட்டர் கொள்ளளவுடைய தண்ணீர் தாங்கியை கையளித்தார்.
5. 5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார்.
6. சிறுபான்மை மக்களின் நலன்கருதி சமாதான பேச்சுக் காலங்களில் எதிர் கொண்ட பிரச்சினைகளை அறிந்து நோர்வே தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
7. அஷ்ரப் வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று வைத்தியசாலை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்றவற்றில் 300க்கும் அதிகமான சமயாசமய ஊழியர்களை வேலைக்கமர்த்தினார்.
7. அஷ்ரப் வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று வைத்தியசாலை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்றவற்றில் 300க்கும் அதிகமான சமயாசமய ஊழியர்களை வேலைக்கமர்த்தினார்.
8. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் கொழும்பில் உயர் மட்டத்தில் கடினமாக பாடுபட்டார்.
மக்களின் சிந்தனைக்கு
எமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதற்கு பிறதேசங்களில் இருந்து படையெடுத்துள்ள சுயநல தலைமைத்துவங்கள் நமக்கு செய்தது என்ன?
01. எமது உயிருக்கும் மேலாக நாம் மதிக்கும் நமது பள்ளிவாசல்களை சிங்களப் பேரினவாதிகள் உடைத்து நொறுக்கியபோது இந்த தலைவர்கள் தங்களது கூலிப்பட்டாளங்களோடு பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கி கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது அரசைப் பலப்படுத்துவதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
02. யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்று கூட அகதிகளாக அல்லல்படும் போது பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கி கொண்டிருந்ததோடு அதே அரசுக்கு தங்களது பட்டாளங்களோடு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
03. பொதுபல சேனாவினால் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை களில் கைவைக்கும் போது எந்த வித உணர்ச்சிகளுமற்ற மரக்கட்டைகளாய் தங்களது கூலிப்பட்டாளங்களோடு பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கி கொண்டிருந்தார்கள்.
04. பேருவளை தர்கா நகர்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எமது முஸ்லிம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட போது எந்தவொரு எதிர்ப்புக் குரலும் காட்டாமல் தங்களது கூலிப்பட்டாளங்களோடு பாராளுமன்றக் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருந்தார்கள்.
05. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் யானை சின்னத்தில் கண்டி, வன்னி இரண்டு சுய நலத் தலைமைகளும் இணைந்து தேர்தலில் போட்டி இடும் போது (திகாமடுல்ல) எமது பிரதேசத்தில் மட்டும் இணைந்து கேட்காமல் தங்களது கபட நாடக அரசியலை அரங்கேற்றி ஒரு முஸ்லிம் பிரதிநிதியையாவது பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு எமது பிரதேசத்தில் பெரிதான சதித்திட்டம் தீட்டுகிறார்கள். மக்களே கவனம்.