(TNN)
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண உண்மையான அக்கறை நிறையப் பெற்றவர் என்று தெரிவித்து உள்ளார் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி.
கொழும்பில் அமைச்சுக் காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இப்பேட்டியில் இவர் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு:-
மஹிந்த ராஜபக்ஸ
பொதுபலசேனாவை சம்பிக்க ரணவக்கவே உருவாக்கினார் என்று அப்பாவி போல இன்று கூறுகின்றார் மஹிந்த ராஜபக்ஸ. அப்படியாயின் அதிகாரத்தில் இருந்தபோது ஏன் இவர் பொதுபலசேனாவை அடக்க முயலவில்லை. பொதுபலசேனாவை ஏன் தடை செய்யவில்லை? முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் அட்டகாசங்களை இவர் சிறிய சம்பவமாகவே பார்த்தார்.
அரசமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வாதிகார ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது. தனிப்பட்ட நபரிடமும், தனிப்பட்ட குடும்பத்திடம் ஆட்சி அதிகாரம் கொட்டிக் கிடக்க காரணம் ஆனது. 18 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னரே முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன.
எனவே நாடாளுமன்றத்தில் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பு, நன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றது. இது உண்மையில் மகிழ்ச்சி தருகின்ற சாதனை ஆகும்.
தமிழ் பேசும் இனங்களின் ஆதரவு கிடைக்காததாலேயே மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ரவூப் ஹக்கீம்
மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இராஜதந்திரமும், தலைவர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சாணக்கியமும் இருக்கவே செய்கின்றது. ஏனென்றால் கடந்த கிழக்கு மாகாண தேர்தல் முடிவுற்றதை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று சம்பந்தன் ஐயா அழைப்பு விடுத்து இருந்தார்.
ஆனால் நாம் இக்கோரிக்கையை அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிருப்தியை கொடுத்து இருந்தது. ஆனால் நாம் அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று கிழக்கில் கூட்டாக ஆட்சி அமைத்து இருந்தால் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்து விரட்டி இருக்கவோ, மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையிலான நல்லாட்சியை ஏற்படுத்தவோ முடியாமல் போயிருக்கும்.
எப்படி என்று சொன்னால் தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்து நாம் அப்போது ஆட்சியை ஏற்படுத்தி இருப்போமானால் அது சிங்கள தேசத்துக்கு பிழையான விளக்கத்தை கொடுத்து இருக்கும். வடக்கு, கிழக்கில் தமிழீழம் வந்து விட்டது என்கிற பிரச்சாரம்தான் ஓங்கி ஒலித்து இருக்கும். இதனால் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் வென்று இருப்பார். மைத்திரியின் நல்லாட்சி மலர்ந்து இருக்க மாட்டாது.
தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுத்தான் உள்ளன. ஆனால் இரு இனங்களும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல ஒன்றாக இருக்கின்றபோதுதான் பெறுமதியும், மதிப்பும் இருக்கும்.
சம்பந்தன்
எதிர்க் கட்சி தலைவர் பதவிக்கு உண்மையிலேயே தகுதியானவர் சம்பந்தன். இதை நான் பல இடங்களிலும் வலியுறுத்தி வந்திருக்கின்றேன். ஆனால் இனவாதிகள் இப்பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
சத்தியலிங்கம்
வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் உண்மையிலேயே கெட்டிக்காரர். நான் அண்மையில் வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தேன். வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு நிலையம் உள்ளது. இந்நிலையத்துக்கு செல்கின்ற திட்டம் எனது நிகழ்ச்சி நிரலில் இருந்து இருக்கவே இல்லை. ஆயினும் இவர் என்னிடம் தனிப்பட வேண்டுகோள் விடுத்து இந்நிலையத்துக்கு அழைத்து சென்றார். இந்நிலையம் வெகுசிறப்பாக இயங்கி வருகின்றமையை அவதானித்தேன். இப்பெருமை சத்தியலிங்கத்துக்கு உரியது.
டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா அற்புதமான ஒரு மனிதர். எதிரே வந்த மரணத்தை 13 தடவைகள் வென்றவர். அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டே சிறுபான்மை மக்களின் நலன்களை பாதிக்கக் கூடிய விடயங்களை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவே எதிர்த்து உள்ளார். இவரின் பாதை வேறுபட்டது. ஆனால் எல்லா நதிகளும் சமுத்திரத்தைத்தான் சென்றடைகின்றன.
ராஜித சேனாரட்ண
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண உண்மையான அக்கறை நிறையப் பெற்றவர். இனவாத சிந்தனை இல்லாதவர். சிறுபான்மை இனங்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று விரும்புபவர். வடக்கு, கிழக்கில் உள்ள வைத்திய மற்றும் சுகாதார விடயங்களை கையாள்கின்ற பொறுப்பை எனக்கு தந்து உள்ளார். இவருடன் வேலை செய்கின்றமையை பெருமையாக கருதுகின்றேன்.
