GuidePedia

(எம் ஐ. நிஷாம்தீன்)
கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் சட்ட ஆலோசனையை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவை ஒக்டோபர் மாதம் வரை பிற்போட்டுள்ளமையானது மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் விரைவில் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவே பொதுநலவாய நாடுகளின் சட்ட ஆலோசனையைப் பெற உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“பொதுசன ஊடகங்களின் ஊடக சீர்திருத்தம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் எவருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும். எனினும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நானும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு ஒக்டோபர் மாதம் வரை காத்திருக்க முடியாது.

எனக்கு இந்த விடயம் தொடர்பில் இலகுவாக கருத்துக்களை தெரிவிக்க முடியும். நிதி மோசடி விசாரணைப்பிரிவு பொலிஸ் மா அதிபரின் கீழ் பொலிஸ் திணைக் களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய நிதி மோசடிகளை விரைவாக விசாரணை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவு எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி செயற்படுகிறது.

அவ்வாறே, சகல விசாரணைகளும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மூலம் அடிப்படை உரிமை மீறலுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியுமாக இருந்தால் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு சட்டத்தில் வேறு வழிமுறைகள் இல்லையா?

கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டு மென்ற உரிமை இருக்கிறது. ஏனெனில் அவருடைய உரிமை மீறல் மீறப்பட் டுள்ளதை தெரிந்து கொள்ள எந்தளவு ஆர்வமாக இருக்கிறாரோ நாமும் அந்தளவு கருத்துக்களை தெரிவிப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

இதில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார். இந்நிலையில் அடுத்த பாராளு மன்றத்தில் யாரும் தெரிவு செய்யப் படலாம். 2015ஆம் ஆண்டு பாராளு மன்றத்தில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படலாம். தற்போதுள்ளவர்களும் அமைச்சரவையும் மாற்றம் பெறுவதுடன் செயலாளர்களும் மாறலாம்.

இந்நிலையில் எனது ஆட்சேபனைகளை தெரிவிக்க உள்ளதால் ஒக்டோபர் மாதம் வரை காத்திருக்க முடியாது.

உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தொடர்பில் எமக்கு கருத்துக்களை தெரிவிக்க முடியும். அவ்வாறே பொதுமக்களுக்கு இது உரிமை மீறலா அல்லது அரசியல் பழிவாங்கலா என்பது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு காலம்தாழ்த்தப்படுவதால் மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக அமையும். எனவேதான் நாம் விரைவில் இது தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டுமென கோருகிறோம்.

இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதாவது, பொதுநலவாய நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார். இதனடிப்படையில் எமக்கு பொதுநலவாய நாடுகளின் நீதிச்சங்கம், நீதிபதிகளின் சங்கம் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று இதற்கு மாற்றுவழியை பயன்படுத்தி உடனடி தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.



 
Top