GuidePedia

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு இயல்பாகவே ஐக்கிய தேசிய கட்சி என்றால் அலர்ஜி, ஆகவேதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை பதில் அமைச்சருமான ஹசன் அலி.

இவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதை தெரிவித்து உள்ளார்.

இவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புக் கொள்கையையே முன்னெடுத்து வருகின்றனர், மற்றப்படி இவர்களிடம் உருப்படியான கொள்கை என்று எதுவும் கிடையாது, இவர்கள் உண்மையில் சமூக அக்கறை உடையவர்களும் அல்லர், உண்மையான கமியூனிஷ்டுகளும் அல்லர், கமியூனிஷம் என்றோ செத்து விட்டது என்றார்.

கடந்த நாட்களில் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியமை மூலம் இருந்த கொஞ்ச மதிப்பையும் வாசுதேவ நாணயக்கார இழந்து விட்டார் என்றும் இவர் மேலும் கூறினார்.

ஒருவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய தேசிய கட்சியில் இணைவார் என்றால் அவ்வளவுதான் இந்த இருவரும் மஹிந்தருக்கான ஆதரவை விலக்கிக் கொள்வார்கள், மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விடுவார்கள் என்றும் இவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் நிபுணர்கள் குழு ஒன்று மிக இரகசியமான முறையில் உத்வேகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது, மஹிந்தரின் ஆட்சியில் இடம்பெற்று இருக்கக் கூடிய அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், இலஞ்சங்கள், முறைகேடுகள், சட்ட விரோத செயற்பாடுகள் போன்றன குறித்து மிக துல்லியமாக ஆதாரங்களை சேகரித்துக் கொண்டே இருந்தது, எனவே பிழை செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது என்றும் இவர் சொன்னார்.



 
Top