GuidePedia


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான ஜனவரி 8ம் திகதி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்து தேர்தல் முடிவுகள் வெளியாவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதென தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 

ஜனவரி 8ம் திகதி ராஜதுரோக சூழ்ச்சி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகள் - ஜனாதிபதி இடையேயான சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி பதில் அளித்தபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தன்னை கொலை செய்ய முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் குறித்து இதுவரை மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து உள்நாட்டு விசாரணை இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் இவ்விடயத்தில் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மட்டாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தில் தான் இருந்த போது நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

நாட்டில் அடுத்து பொதுத் தேர்தல் இடம்பெறும் என்றும் அது புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடைபெறும் என்று இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பொலிஸ் நிதி மோசடி பிரிவை இரத்து செய்வதற்கு தான் உறுதி அளிக்கவில்லை என்றும் ஆனால் அதில் உள்ள சில சரத்துக்கள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

பொலிஸ் நிதி மோசடி பிரிவு அரசியல் கட்சி ஒன்றின் செயற்திட்டத்திற்கு இயங்குகிறது என்று எவரும் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் அது குறித்து ஆராயப்படும் என்றும் ஆனால் தற்போதைய நிலைபடி அதில் அரசியல் செயற்பாடு இல்லை என்பது புலப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். 



 
Top