GuidePedia

அமைச்சர் றிஸாத் வில்பத்து வனப்பகுதியினை அழித்து சட்ட விரோதமாக முஸ்லிம் மக்களினை குடியேற்றியுள்ளதாக பேரின சில குழுக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.1990 ம் ஆண்டு காலப்பகுதியில் தங்கள் வாழ்விடங்களினை விட்டு இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட இம் மக்கள்  2009 ம் காலப் பகுதியில் யுத்தம் ஓய்ந்த போதும் 2012 ம் ஆண்டில் தான் குடி அமர்த்தப்பட்டனர்.இது வரை காலமும் அங்கும் இங்கும் என அலைந்து தங்கள் வாழ்வினைக் கழித்த இம் மக்களிற்கு இப் பிரச்சினை தங்கள் தூக்கங்களினை மேலும் தொலைக்கச் செய்துள்ளது.அன்று விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித் தனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காவியுடை தரித்த சிலரின் செயற்பாடுகளினால் நிம்மதியைத் தொலைத்து நிற்பதானது வேதனைக்குரிய விடயமாகும்.

தற்போது இப் பிரச்சினையினை சிஹல ராவய அமைப்பே தூக்கிப் பிடித்து பூதகரமாக்கியுள்ளது.இவ் அமைப்பானது அமைச்சர் றிஸாத்தினைக் கைது செய்யாது விடுகின்ற போது உண்ணாவிரதத்தில் களமிறங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.இவ் அமைப்பானது ஹெல உறுமய அரசியற் கட்சியின் ஒரு பிரிவாகவே பார்க்கப்பட்ட அமைப்பாகும்.இவ் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரோ ஹெல உறுமய கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.தற்போது ஹெல உறுமய பல கூறுகளாக பிரிந்து காணப்படுவதனால் இவ் அமைப்பின் தற்போதைய ஆதரவு பற்றி தெளிவு படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாது போனாலும் இவ் அமைப்பின் செயற்பாடு அரசியல் இலாபங்களுக்கானது என்பதனை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இவ் விடயமானது இன வாதத்தினால் முலாமிடப்பட்டு மக்களிடையே கொண்டு செல்லப்படுகின்ற போது தற்போதைய அரசினை மிகப் பெரிய பொறியில் இலகுவாக மாட்டி விடலாம்.தற்போது இப் பிரச்சினை முழு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளதால் இக் காணிகளிற்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது அது முழு இலங்கை முஸ்லிம்களினது பிரச்சினையாக உற்று நோக்கப்படும்.இக் குடியேற்றமானது முன்னாள் ஜனாதிபது மகிந்த ராஜ பக்ஸ ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட ஒன்று என்பதால் இதில் தற்போதைய அரசு முஸ்லிம்களிற்கு எதிராக செயற்படும் போது ஜனாதிபதி மைத்திரியும் மகிந்த இடத்தில் வைத்தே முஸ்லிம்களினால் பார்க்கப்படுவார்.மகிந்த ராஜ பக்ஸ  ஆட்சிக் காலத்திலும் இப் பிரச்சினை பொது பல சேனாவினால் அருட்டிவிடப்பட்ட போதும் அவர்களினால் எதனையும் இவ் விடயத்தில் முஸ்லிம்களிற்கு எதிராக செய்ய இயலாத வகையில் இப் பிரச்சினையினை கையான்டிருந்தார்.இப் பிரச்சினையில் மைத்திரியால் பேரின மக்களினை சமாளிக்க முடியாது போகின்ற போது மகிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறிய செயற்பாடுகள் அனைத்தும் மகிந்தவினை மீறித் தான் நடந்துள்ளன என்ற கருத்து முஸ்லிம் மக்களிடையே வலுக்க இப் பிரச்சினை வித்திடும்.அல்லாது போனாலும் முஸ்லிம் மக்களினை உளவியல் ரீதியாக மைத்திரி ஆட்சியினை விட்டும் வெளியேற்ற இது அடித்தளமாகும்.மகிந்த முஸ்லிம்களிற்கு சார்பாக நடந்துள்ளாரே என்ற வினாவினை பேரின மக்கள் கேட்க எத்தனித்தாலும் அதனை பேரின பெரும் பான்மை சமூகம் ஏற்க மாட்டாது என்கின்ற வேளை ஏற்றாலும் அதனை இனவாத்தத்தினால் எதிர்கொள்ளும் வல்லமையும் அவரிடம் உள்ளது எனலாம்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரி இவ் விடயத்தில் முஸ்லிம்களிற்கு தீர்வு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும் “இடம் பெயர்ந்தவர்களோடு மூன்று மடங்கால் பெருகிய அவர்கள் குடும்பமும் குடியேற்றப்பட்டுள்ளது” எனப் பகிரங்கமாக ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்து இனவாதிகளின் கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நடந்துள்ளமை முஸ்லிம் மக்களிடையே அதிருப்திக்கு காரணமாகியுள்ளது.ஏனெனில்,இங்கே குடியேற்றப்பட்டவர்கள் தங்களது உரிய நிலங்களிலேயே குடியேற்றப்பட்டுள்ளதாகவே இக் குடியேற்றத்திற்கு நியாயம் கற்பிக்கப்படும் இவ் வேளையில் மைத்திரி கூறியுள்ள இக் கருத்து அதனையும் மீறி அதிகம் வழங்கப்பட்டுள்ளது என்ற பொருளினை விளை வாக்குகின்றது.25-05-2015 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் “வில்பத்து குடியேற்றங்களினை ஏற்க முடியாது என நேரடியாகவே ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.இனவாதிகள் இதற்கு எதிராக கிளர்ந்து எழ இக் கருத்து ஒன்றே போதுமாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இவ் விடயம் பற்றி ஊடகவியலார்கள் கேள்வி எழுப்பிய போது இவ் விடயத்தினை ஜனாதிபதி மைத்திரி கையாள்கிறார் என பதில் அளித்து தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இலகுவாக தப்பித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரி தலையிடும் விடயத்தில் பிரதமர் தலையிடாமல் இருக்கும் அளவு இவர்கள் இருவரிற்கும் இடையில் நல்லுறவு இல்லை என்பதே உண்மை.இவ் பதிலானது இவ் விடயம் மிகக் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதனை தெளிவாக்குகிறது.மேலும்,நேரடியாகவே பிரதமர் ரணில் மைத்திரியினை கோர்த்து விட்டுள்ளமை இவ் விடயம் தொடர்பாக இவர்கள் ஒரு தீர்க்கமான முடிவில் உள்ளமையினையும் எடுத்துக் காட்டுகிறது.தற்போதைய சுற்றாடல் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி பதவி வகிப்பதால் இக் கோர்த்து விடுகைக்கும் சாதகமாக அமைத்துள்ளது.ஏனையோரினை விடாது இப் பிரச்சினையினை தன் தலையில் மாத்திரம் போட்டுள்ளமை எதிர் வரும் வரும் தேர்தலில் இப் பிரச்சினை எது வித எதிர் விளைவினையும் ஏற்படுத்தாது தடுப்பதற்கான யுக்தியாகவும் இருக்கலாம். 

இவ் விடயத்தின் உண்மைத் தன்மையினை அறிய பல பிக்குமார்கள் பஸ் பிடித்து அங்கே நேரடியாகச் சென்றுள்ளனர்.பல அரசியல் வாதிகளும் அங்கே சென்று இது பற்றி வினவியுள்ளனர்.அமைச்சர் சம்பிக்க ரணவக்க,பசில் ராஜ பக்ஸ இப்படி பலரும் இது பற்றி தங்கள் கருத்துக்களினை வெளிப்படுத்திய போதும் அமைச்சர் றிஸாத் பதியூர்தீனைத் தவிர ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் இதனை ஒரு பொருட்டாக கணக்கு எடுத்ததாக அறிய முடியவில்லை.ஆ என்றாலே பல பந்திகளினையும் பலரினையும் தாக்கி அறிக்கை விடும் மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி,முஜீபுர் ரஹ்மான்,பைரூஸ் ஹாஜி ஆகியோர் இவ் விடயத்தில் சொல்லி வைத்தாப் போல் மௌனம் காப்பது பலத்த சந்தேகங்களினை கிளறி விடுகிறது.முஸ்லிம்களின் தனித்துவமான கட்சி என தங்களினை வெளிப்படுத்திக் காட்டும் மு.கா இன் எந்த உறுப்பினர்களும் இதனைப் பற்றி சிறிதும் கணக்கு எடுக்கவில்லை.

இவ்வாறானவர்களின் வாய் மூடுகைக்கு இத்தோடு அமைச்சர் றிஸாத் அழிந்துவிடட்டும் என விட்டு விட்டதாகவும்,இதற்கு போராடுகின்ற போது சிங்கள மக்களின் வாக்குகளினை இழக்க வேண்டி வரும் என்ற அச்சம்,பிரச்சினையினை குறைக்கும் நோக்கம்,அமைச்சர் றிஸாத்தின் ஊழல்கள் சில அங்கே காணப்படுவதால் அங்கே மூக்கினை நுழைக்க விரும்பாமை ஆகிய காரணங்கள் பிரதானமாக முன் வைக்கப்படுகின்றன.

இக் குடியேற்றம் சட்ட விரோதமானது என நிரூபிக்கப்பாட்டாலும் அமைச்சர் றிஸாத்தினை எவ் விதத்திலும் அடக்கி ஒழிக்க முடியாது என்பதே உண்மை.இக் குடியேற்றங்களினை நிறுவுவதற்கு இவர் அடிப்படைக் காரணியாக இருந்தாலும் நேரடியாக இவர் அக் குடியேற்றங்களில் சம்பந்தப்படவில்லை.இவர் நேரடியாக சம்பந்தப்பட அக் குடியேற்றம் நடை பெற்ற காலப்பகுதியில் சுற்றாடல் அமைச்சராகவோ,மீள் குடியேற்ற அமைச்சராகவோ,வனப் பாதுகாப்பு சம்பந்தமான பதவிகளிலோ இவர் இல்லாத போது எப்படித் தண்டிக்க முடியும்?இச் சம்பவங்களில் அமைச்சர் றிஸாத் வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி முஸ்லிம் மக்களின் அதீத ஆதரவினை இவர் தன வசப்படுத்திக் கொள்வார்.அழிவார் என்பதை விட உயர்வார் என்பதே உண்மை ஆகும்.இதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல.எனவே,இத்தோடு இவர் அழியட்டும் என விட்டு விட்டாதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மை இருப்பதாக அறிய முடியவில்லை.

அறிக்கை மன்னர்களான வர்ணிக்கப்படும் அசாத் சாலி,முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் மேலும் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் ஒன்றும் சிங்கள மக்களின் வாக்குகளினால் தேர்வாகுபவர்கள் அல்ல.இவர்களின் செயற்பாடுகளினால் இவர்கள் இணைந்து கேட்கும் தேசியக் கட்சிக்கு அளிக்கப்படும் பேரின மக்கள் வாக்குகள் குறைந்தாலும் குறையுமே தவிர அதிகரிக்காது என்பதே உண்மை.கண்டி மாவட்டத்தில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க நான்கு ஆசனங்களினை இழக்க அசாத் சாலி இணைந்து கேட்டமையே என பலராலும் குறிப்பிடப்பட்டமை இங்கே கோடிட்டுக் காட்டத்தக்கது.எனவே.இரண்டாம் குற்றச் சாட்டிலும் உண்மை இருப்பதாக குறிப்பிட முடியாது.

முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுக்கும் போது முஸ்லிம் சிங்கள மக்களுக்கிடையிலான ஒரு இன மோதலாக வடிவமெடுக்கும் என்ற அச்சம் இவர்களின் மௌனத்தின் காரணமோ என பலராலும் கூறப்பட்டு வருகிறது.இவ் அச்சம் அமைச்சர் ஹக்கீமிற்கு சிறிது இருக்கலாம் என்று கூறினாலும் அசாத் சாலி,முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் இது பார்த்துக் கதைப்பவர்கள் அல்ல.இவ்வாறான சந்தர்ப்பங்களினை வைத்து தான் இவர்கள் அரசியல் செய்பவர்கள்.மேலும்,மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் குரல் கொடுக்காது போனாலும் கட்சி உறுப்பினர்கள் யாராவது குரல் கொடுக்கலாமே? ஆனால் யாரும் குரல் கொடுக்கவில்லை.இவ் விடயத்தில் அமைச்சர் றிஸாத் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரினை மாத்திரம் விட்டு விட்டு ஏனையோர் மேலிடத்துக் கட்டளைக்கு ஏற்ப சொல்லி வைத்தாப் போல் வேடிக்கை பார்ப்பது போன்று தோன்றவில்லையா?

இவ் விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையீடுகள் அதிகரிக்கும் போது அதை விடப் பன் மடங்கு பேரின மக்களின் தலையீடுகள் அதிகரிக்கும்.இவ் விடயத்தில் சில சட்ட வரம்புகள் மீறப்பட்டுள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது.ஏனெனில்,ஹிரு தொலை காட்சி விவாதத்தின் போது ஊடகவியலாளர் சுஜீவயின் வினாவிற்கு அமைச்சர் றிஸாத் “சட்டங்களினை  ஓரங்கட்டி விட்டு இதனை மனச் சாட்சியுடன் நோக்குங்கள்” என பதில் அளித்துள்ளமை போதுமான சான்றாகும்.எனவே,இதனை அனைவரும் தூக்கி பார்க்காது விடுகின்ற போது இது அமைச்சர் றிஸாத்தின் பிரச்சினையாக மாத்திரமே பார்க்கப்படும்.குப்பைகள் அதிகம் கிளறப்படாது பாதுகாக்கப்படும்.இப் பிரச்சினையில் அனைத்து அரசியல் வாதிகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது மகிந்த அரசு போன்று இவ் அரசும் முஸ்லிம்களிற்கு  அதிக சவாலானது என்ற தோற்றப்பாடு ஏற்படும்.இது மிக அண்மையில் வரும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில் மிகப் பெரிய எதிர்விளைவினை ஏற்படுத்துவது மாத்திரம் அல்லாது மகிந்த ராஜ பக்ஸவின் வெற்றிக்கும் அதிக சாதகமாக அமையும் என்பதால் தற்போதைய அரசின் அறிவுறுத்தளிற்கு அமைய அனைவரும் செயற்படுகிறார்களா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது,
இவ் விடயத்தில் தங்கள் ஆதரவினை முஸ்லிம் அரசியல் வாதிகள் வழங்க எத்தனித்தாலும் இவ் விடயத்தில் அதீத ஈடுபாட்டினை காட்டி வரும் அமைச்சர் றிஸாத்திற்கு கீழ் இருந்தே இவ் விடயத்தினை எதிர் கொள்ள வேண்டும்.இது நானா? நீயா?  பெரிய ஆள் என்ற போட்டி உடைய அரசியல் வாதிகளின் தன் மானப் பிரச்சினைக்கு அதிக சவாலானது.எது எவ்வாறு இருப்பினும் இப் பிரச்சினை இலங்கையின் அதிகமான முஸ்லிம்கள் அமைச்சர் றிஸாத் பக்கம் தங்கள் பக்கம் திருப்ப காரணமாகியுள்ளது என்பதனை மறுக்க முடியாது.மருச்சுக்கட்டியில் மறக்க முடியாத கதா நாயகனாக அமைச்சர் றிஸாத் திகழப் போகிறார் என்பதிலும் மாற்றமில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



 
Top