GuidePedia

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலிக்கு நேற்று பிறந்த நாள்.
1945 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பிறந்த இவருக்கு 70 ஆவது அகவை நிறைவு. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக இணைப்புத் தளங்களில் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகளின் வாழ்த்துச் செய்திகள் இவருக்கு வந்து குவிகின்றன. மிக நெருக்கமான நண்பர்கள் இவரை தொலைபேசி ஊடாகவும் வாழ்த்தினார்கள்.
இவரின் சொந்த இடமான நிந்தவூரை சேர்ந்த ஊடக நண்பர் ரியாஸ் அஹமட் சலாம் என்பவர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு குடும்பத்துடன் சென்று அமைச்சருக்கு நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், அரசியலில் தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வேண்டும் என்று விசேட பிரார்த்தனைகள் மேற்கொண்டு உள்ளார். இதே போல இவரின் அயல் கிராமமான காரைதீவை சேர்ந்த விஜயானந்தம் என்பவர் பிரசித்தி வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு சென்று அமைச்சருக்கு நன்மைகள் வேண்டி அர்ச்சனைகள், வழிபாடுகள் செய்து உள்ளார்.
பொதுவாக முஸ்லிம்கள் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை. இருப்பினும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.
ஆனால் கடந்த 06 வருடங்களாக பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றமையை ஹசன் அலி தவிர்த்தே வருகின்றார் என்று அறிய முடிகின்றது.
இது குறித்து வினவியபோது தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உறவு பிட்டும், தேங்காய்ப் பூவும் போன்றது, இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழே தாய் மொழி, சமயத்தால் வேறுபட்டாலும் மொழியால் இரு இனத்தவர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர், மே 18 ஆம் திகதியை தமிழ் சகோதரர்கள் துக்க தினமாக அனுட்டிக்கின்றபோது எப்படி பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும்? இது ஒரு விரதம் அல்லது சபதம் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று பதிலுக்கு தெரிவித்தார் அமைச்சர்.



 
Top