GuidePedia


பாலியல் வன்புணர்வுக்கு   உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் திருகோணமலை சம்பூர் அகதி மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கிழக்கு மாகாணம் தழுவிய மாணவர் பகிஷ்கரிப்புக்கு எதிர்வரும்(22/05/2015)வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுத்தம் முடிவடைந்து பல வருடங்களான போதிலும், படுகொலைகளும் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அகதி வாழ்க்கையும் முடிவின்றித் தொடர்கின்றது.


படுகொலைகளும் பெண்கள், சிறுவர்கள், மாணவர்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்' என்றார். 'படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு நீதி விசாரணை வேண்டும். 


முடிவின்றித் தொடரும் சம்பூர் மக்களின் அகதி வாழ்க்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், சம்பூர் பிரதேசத்திலுள்ள 3 பாடசாலைகள் உடனடியாக அந்தப் பிரதேச மாணவர்களின் கல்வி நலனுக்காக படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் அந்தப் பிரதேச மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இதற்கு  இன, மத பேதம் இன்றி கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், திருகோணமலை சிவில் சமூகம் என்பன ஆதரவளித்துள்ளன'  என அவர் தெரிவித்தார்.







 
Top