முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெற்கு இனவாதத்தை பிரதிநிதித்துவம் செய்து வருவதாக ஜே.வி.பி மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஒரு இனவாதத்தை பிரதிநிதித்துவம் செய்து மற்றுமொரு இனவாதத்தை மஹிந்தவினால் தோற்கடிக்க முடியாது.
கடந்த காலங்களில் சிங்கள இனவாதத்தின் தலைவராக மஹிந்த செயற்பட்டார். தற்போது தெற்கு இனவாதத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
இந்த நாட்டில் எந்தவொரு இனவாத அரசியலுக்கும் இடமளிக்கக் கூடாது.
இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் இனவாதத்தை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது.
இனவாதம் வடக்கிலும் தெற்கிலும் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளது.
கடந்த காலங்களில் தோற்கடிக்கப்பட்டது தமிழ் இனவாதத்தின் இராணுவ பிரிவு மட்டுமேயாகும்.
தமிழ் இனவாதம் வடக்கிலும், தெற்கிலும், கொழும்பிலும் மலையகத்திலும் காணப்படுகின்றது.
பிரிவினைவாதத்தை தோற்கடிக்க மஹிந்தவினால் முடியவில்லை.
பிரிவினைவாதத்தின் போர் வடிவம் மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து பிரிவினைவாதங்களும் காணப்படுகின்றன.
மஹிந்த ராஜபக்சவின் பெரும்பான்மை இனவாதம் தலைதூக்கும் அளவிற்கு சிறுபான்மை சமூகத்தின் இனவாதம் தலைதூக்கும்.
சிங்கள இனவாதத்தின் ஊடாக தமிழ் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது.
சிங்கள இனவாதத்தில் மறைந்து கொண்டே மஹிந்த வடக்கு இனவாதம் பற்றி பேசி வருவதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.