இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அடங்கும்.
எனினும் இரு நாட்டு அரசுகளின் அனுமதியை பொறுத்தே இந்த போட்டி தொடர் நடைபெறுவது இறுதியாகும்.
இந்த போட்டி தொடருக்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் போட்டி தொடர்களை டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு போட்டி தொடர்களின் அடிப்படையில் ஒளிபரப்பு செய்து வருகிறது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடரை டென் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடி ஒளிபரப்பு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.
இந்த போட்டி தொடருக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்த பின்னர் ஒளிபரப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.