GuidePedia


சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவைக் கான முழு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘இம்மாத இறுதியில் அனுமதி கிடைக்கலாம்’ என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சென்னையில் 2 மார்க்கங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டரும், 2-வது வழித்தடம் சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் வரையிலும் பணிகள் நடக்கிறது.

சுரங்கப்பாதையில் 19 ரெயில் நிலையங்கள், உயர்த்தப்பட்ட பாதையில் 13 ரெயில் நிலையங்கள் உள்பட 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்வதற்காக ஆய்வு நடத்தவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய பணிகள், ரெயில் பாதைப்பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனை பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து கோயம்பேடு-அசோக் நகர் வரை ரெயில் கள் இயக்க அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து அசோக் நகர் முதல் ஆலந்தூர் வரையிலான அனுமதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்த உடன், பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பின்னர் இம்மாத இறுதியில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 9 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அலுவலக நேரங்களில் அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் ரெயில் போக்குவரத்து நடைபெற வாய்ப்பு உள்ளது. சென்னை முழுவதும் 77.5 சதவீதம் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளது. ஒப்பந்தகாரர்கள் பிரச்சினை தொடர்பாக பூங்கா முதல் சைதாப்பேட்டை வரை ஒரு சில பகுதிகளில் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. விரைவில் இந்த பகுதியில் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரெயில் சேவைக்கான மாதிரி கட்டண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.8 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டருக்கு ரூ.11-ம், 6 முதல் 9 கிலோ மீட்டருக்கு ரூ.14-ம், 9 முதல் 12 கிலோ மீட்டருக்கு ரூ.15-ம், 12 முதல் 15 கிலோ மீட்டருக்கு ரூ.17-ம், 15 முதல் 18 கிலோ மீட்டருக்கு ரூ.18-ம், 18 முதல் 21 கிலோ மீட்டருக்கு ரூ.19-ம், 21 முதல் 24 கிலோ மீட்டருக்கு ரூ.20-ம், 24 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.22-ம், 27 கிலோ மீட்டருக்கு ரூ.27-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெயிலின் முதல் பெட்டி முதல் வகுப்பு பெட்டியாகும். இந்த கட்டண பட்டியல் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியை பெற்று வெளியிடப்பட உள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பாதையில் எவ்வளவு தூரம் சுரங்கப்பாதை அமைப்பது, எவ்வளவு தூரம் பறக்கும் பாதை அமைப்பது, பாதையை பயணிகள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் எவ்வாறு வடிவமைப்பது என்பன உட்பட பல்வேறு தகவல்களை அளிப்பதற்கான நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

வண்ணாரப்பேட்டையை அடுத்துள்ள கொருக்குபேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஸ்ரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 7 இடங்களில் ரெயில் நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக மத்திய நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அனுமதி அளித்துள்ளார்.

மேலும் புதிதாக 3 வழித்தடங்கள் குறித்து ஆய்வு தொடங்கியுள்ளது. மாதவரத்தில் இருந்து பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ஜெமினி, ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் வழியாக கலங்கரை விளக்கம் வரை 17 கிலோ மீட்டர் தூரம் வரை 3-வது வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு, சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல்பார்க், நந்தனம், லஸ், மந்தைவெளி, அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம் வழியாக ஈஞ்சம்பாக்கம் வரை 27 கிலோ மீட்டர் தூரம் வரை 4-வது வழித்தடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரம்-கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், டிரேட் சென்டர், ஓ.டி.ஏ, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மேடவாக்கம் வழியாக பெரும்பாக்கம் வரை 32 கிலோ மீட்டருக்கு 5-வது வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 3 புதிய வழித்தடங்களும் 76 கிலோ மீட்டர் நீள பாதையை உள்ளடக்கியதாகும். இந்த பாதையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில் அறிக்கையை தயாரிக்க நிறுவனங்கள் முதல் கட்ட ஆய்வு அறிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆய்வறிக்கையை தயாரித்த பின்னர், இந்த 3 வழித்தடங்களுக்கு தேவைப்படும் நிலம்?, ரெயில் நிலையங்கள் அமைக் கப்பட வேண்டிய இடங்கள்? குறித்து ஆய்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 



 
Top