GuidePedia

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்திகள் பொய்யானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திவிநெகும திணைக்கள ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பசில் ராஜபக்ச கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு நேற்று அதிகாலையில் பக்கவாத நோய் சிறியளவில் தாக்கியதாகவும், சிறியளவிலான மாரடைப்பு ஏற்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின.
இதையடுத்து. அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய சிகிசிசைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எனினும் பின்னர், அவர் கட்டண விடுதிக்கே கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், பசில் ராஜபக்சவுக்கு பக்கவாதம் தாக்கியதாக தனக்கு எதுவும் தெரியாது என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“பசில் ராஜபக்ச நேற்றுக்காலை இதயநோய்ப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நோயாளி ஒருவரை இதயநோய்ப் பிரிவுக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படுவது வழக்கமான ஒன்று தான்.
பரிசோதனைகளின் பின்னர், பசில் ராஜபக்ச மீண்டும் கட்டண விடுதிக்கே கொண்டு வரப்பட்டுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள விளக்கமறியல் உத்தரவு இன்றுடன் காலாவதியாகிறது.
இன்று அவர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய நிலையிலேயே நேற்று அவருக்கு மாரடைப்பு, ஏற்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
பசில் ராஜபக்சவின் ஆதரவாளரான, மேல் மாகாணசபை உறுப்பினர் நிமல் லான்சாவே இந்த தகவலை ஊடகங்களக்கு கசிய விட்டிருந்தார்.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது, பிணை அனுமதி பெறுவதற்காகவே நேற்று மாரடைப்பு, பக்கவாதம் என்று நாடகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, பசில் ராஜபக்சவுக்கு எந்த நோயும் இல்லை என்று சட்டமருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
ஆனாலும், பசில் ராஜபக்ச நீதிமன்றத்துக்கு நோயாளர் காவு வண்டியிலேயே அழைத்து வரப்பட்டிருந்தார். கடுவெல நீதிவான் நோயாளர் காவு வண்டிக்கள் சென்றே அவரைப் பார்வையிட்டு இரண்டு தடவை விளக்கமறியலை நீடித்திருந்தார்.
ஏற்கனவே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்சவுக்கு எந்த நோயும் இல்லை என்று சட்ட மருத்துவ அதிகாரி சான்றிதழ் கொடுத்த பின்னர், அவரை வெலிக்கடைச் சிறை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அங்கு அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடி பசில் ராஜபக்ச மீண்டும், கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே மீண்டும் அவர் மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top