குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க முடியாது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ள லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு அழைத்திருந்தது.
அந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாது, மக்களை திரட்டி தேசிய கொடியையும் திரிபுபடுத்தி ஆணைக்குழுவிற்கு எதிரில் போராட்டம் நடத்தப்பட்டது.
மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி அதன் ஊடாக தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்.
குற்றம் செய்யாவிட்டால் கோத்தபாய ராஜபக்ச, ஆணைக்குழுவிற்கு சென்று வாக்குமூலமொன்றை அளித்து தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் பட்டலந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அவர் நீதிமன்றிம் சென்று விசாரணைக் கூண்டில் ஏறி தனது பக்க நியாயங்களை சொல்லி, வழக்கில் குற்றமற்றவர் என்பதனை நிரூபித்தார்.
கோத்தபாய ராஜபக்சவிற்கும், மஹிந்தவை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏன் தங்களது குற்றமற்ற தன்மையை நிருபிக்க முடியாது?
கோத்தபாயவிற்கு எதிராக மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றம் சென்று அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு எதிராக தடை உத்தரவை கோத்தபாய பெற்றுக்கொண்டார்.
அவ்வாறே கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டார் என அகில விராஜ் காரியாசம் தெரிவித்துள்ளார்.