யாழ்.நீதிமன்ற வளாகப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 130 பேரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 130 சந்தேகநபர்களும், இன்று மூன்று குழுக்களாக யாழ்.நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
நேற்று நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 130 சந்தேகநபர்களும், இன்று மூன்று குழுக்களாக யாழ்.நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இவர்கள் மீது நீதிமன்றக் கட்டடத்தை தாக்கி சேதம் விளைவித்தமை, அங்கிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, காவல்துறையினர் மற்றும் பாதுகாவலர்களைத் தாக்கி காயம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதையடுத்து, குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 47 பேரை வரும் ஜூன் 1ம் நாள் வரையிலும், 43 பேரை எதிர்வரும் ஜூன் 3ம் நாள் வரையிலும், 40 பேரை, எதிர்வரும் ஜூன் 4ம் நாள் வரையிலும் விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ். சிறைச்சாலையில் பெருமளவானோரைத் தடுத்து வைக்க இடமில்லாததால், இவர்கள் அனுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்றும், தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னாள் போராளிகள் சிலரும் இவர்களில் அடங்கியுள்ளனர்.
நேற்றுக் கைது செய்யப்பட்டவர்களில் பலர், சம்பவ இடத்தில் வேடிக்கை பார்க்க கூடியிருந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.