சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுத்த நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இன்று வலியுறுத்தப்பட உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கி கடன் தொகை கூட்டலில் தவறு நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து 8 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்துள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக 10 சதவீதம் அளவு சொத்துக்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கொள்காட்டியே ஜெயலலிதா உள்ளிட்டோரை குமாரசாமி விடுவித்து இருப்பதால் தற்போது அந்த தீர்ப்பு செல்லுமா என கேள்வி எழுந்துள்ளதாக கூறிய கிருஷ்ணமூர்த்தி குமாரசாமியின் தீர்ப்பை திரும்ப பெற கோரி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.
நீதிபதி குமாரசாமியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தயிருப்பதாகவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.