GuidePedia

நேபாள் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஹெலிகொப்டரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளில் கடந்த மாதம் 25 திகதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 8,000 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு, மீட்புப் பணியில் பல்வேறு நாட்டு ராணுவத்தினரும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் செரிகோட் என்ற கிராமத்தின் அருகே நேற்று மாலை 6 அமெரிக்க வீரர்கள், 2 நேபாள ராணுவத்தினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் மாயமானது.
தற்போது, அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படுகிறது, மேலும் 8 பேரின் நிலைமையும் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹெலிகொப்டர் பறந்த பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகொப்டரும் பறந்து கொண்டிருந்தது, இரு ஹெலிகாப்டர்களும் தகவல் பறிமாற்றத்திலும் ஈடுபட்டு வந்தன.
ஆனால், அமெரிக்க ஹெலிகொப்டர் கீழே விழுந்த சத்தமோ அல்லது கீழே விழுந்ததால் ஏற்பட்ட தீ காரணமாக எழும் புகைமூட்டம் ஏதும் காணப்படவில்லை.
இதனால் அந்த ஹெலிகாப்டர் பெரிய அளவில் விபத்தை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க ராணுவம் கருதுகிறது. ஆனால், அந்தப் பகுதியில் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் அமெரிக்க ஹெலிகொப்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



 
Top