சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவும், அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 3 மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு வாய்ப்புக்கள் காணப்படுவதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேராவின் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர், அவருடைய மகனான ரவிந்து வாஸ் குணவர்தன மற்றும் இந்திக்க பமுனுசிங்க, காமினி சனத்சந்திர மற்றும் பியந்த சஞ்ஜீவ ஆகிய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பம்பலப்பிட்டியவில் கோடீஸ்வரர் வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை வழக்கு விசாரணைக்கு முன்வைப்பதாக சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.