GuidePedia

அடுத்த பாராளுமன்றத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும்.
தேர்தலினால் இரு வேறு கட்சிகளுக்கிடையில் போட்டி இடம்பெறும் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அதாவது நல்லாட்சியையும், திருடர்களின் ஆட்சியையும் அவ்விரு கட்சிகளும் குறித்து நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனை கருத்திற்கொண்டே ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களது அழைப்பை ஏற்றுக்கொண்டால் நஷ்டவாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள்.
ஆனால் ஒரு குழுவினர் மாத்திரம் திருடர்களின் ஆட்சியை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் காரணமாகவே அவர்கள் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனது நண்பரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச கோரிக்கைகளை முன்வைத்து எனக்கொரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அவரை நான் நீதிமன்றத்தில் வைத்து சந்திப்பதை குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அழித்த சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கை தயாராகவே உள்ளது.
எனவே முன்னாள் ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டதுடன், அவரை நீதிமன்றத்தில் சந்திக்கவும் நான் தயாராகவே உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மூன்றில் ஒரு குடியரசு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆனால் புதிய அரசியலமைப்பு அனைத்து இலங்கையர்களும் தமிழ், சிங்களம், முஸ்லிம் எனும் பேதமன்றி ஒரு தாய் மக்களாக வாழ்வதற்கு வழி செய்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் புதிய அரசியல் சட்டத்தை பிரகடனப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றுவது என்பது சகல அரசியல் தீமைகளுக்குமான தீர்வாக அமையாது.
நாடாளுமன்றத்தை ஒரு அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும் என்பதினாலேயே புதிய அரசியலமைப்பொன்றை நாம் அறிமுகப்படுத்தினோம்.
தேர்தலின் பின்னர் 5 வருடங்களுக்கான ஒரு தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவே நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எந்த கட்சி கூடுதலான வாக்குகளை பெற்று இருக்கிறதோ அக்கட்சியை சேர்ந்தவருக்கு பிரதமர் பதவியும், இரண்டாவது பெரும்பான்மையை பெற்ற கட்சிக்கு துணை பிரதமர் பதவியையும் வழங்க எண்ணியுள்ளோம்.
எதிர்வரும் பொது தேர்தலின் பின்னரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வருவார் என நான் உறுதியாக கூறுகின்றேன் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.



 
Top