கறுவாத்தோட்ட பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், புதுக்கடை பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு ஆஜர் செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐந்தாயிரம் ரூபா காசுப்பிணையிலும், 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜப்பானில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய அவர் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோதே அங்கு கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத் தடையை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த ஞானசாரர் உட்பட்ட 26 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது .
ஆனால் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகாது வெளிநாடு சென்றிருந்தார்.
இதனையடுத்து, ஞானசார தேரர் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்தே அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.