GuidePedia

(க.கிஷாந்தன்)

அட்டன் – டிக்கோயா நகர சபை மேலதிக செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் 28.05.2015 அன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நகர சபை கட்டிடத்திற்கு முன்பாக 28.05.2015 அன்று நண்பகல் 12 மணிமுதல் ஒரு மணிவரை நடைபெற்றுள்ளது.

“ஆணையாளர், நகர தலைவரின் கட்டுப்பாட்டிலேயே நகர சபை செயற்படுகிறது. ஊடகவியலாளர்களின் கீழல்ல”, “எங்களது உரிமைகளில் தலையிட ஊடகவியலாளர்களுக்கு உரிமையில்லை ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர்” ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குறித்த நகர சபை மேலதிக செயலாளர் மற்றும் 28 உத்தியோகத்தர்களில் 25 பேர் 27.05.2015 அன்று புதன்கிழமை கினிகத்தேனை – களுகல பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றிற்கு அரைநாள் விடுமுறையில் சென்றிருந்தனர்.

27.05.2015 அன்றைய தினம் பொது மக்களுக்கான சேவை தினம் என்றதால் நகர சபைக்குச் சென்றிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்ததோடு, நகர சபையின் தொழிற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இந்த நிலையில் இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் நாம் வினாவிய போது..

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தங்களுக்கு முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறிய ஊழியர்கள், 28.05.2015 அன்று காலை தொழிலுக்கு சமுகமளித்திருந்த போது ஒருதொகை சுவரொட்டிகளையும், பதாகையையும் கையில் கொடுத்த மேலதிக செயலாளர், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும்படி பணித்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை 27.05.2015 அன்றைய தினம் திருமண வைபவத்திற்குச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பில் குறித்த நபர் ஒருவருக்கு முன்னாள் நகர தலைவர் அழகமுத்து நந்தகுமாரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் 28.05.2015 அன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் முன்னாள் நகர தலைவர் அழகமுத்து நந்தகுமாரின் ஊடாகவே நகர சபையின் மேலதிக செயலாளராக எஸ்.பிரியதர்ஷனி நியமிக்கப்பட்டதாக நகர சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.







 
Top