(எம். எஸ். பாஹிம்)
உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு குறித்து எதிர்வரும் 20ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேர்தல் மறுசீரமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் இறுதி அறிக்கை 20 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப் பிக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் 20ஆவது அரசிய லமைப்பை நிறைவேற்றிய பின்னர் தற்போதுள்ள விகிதாசார முறையின் கீழா அல்லது புதிய தேர்தல் முறையின் கீழா தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அமைச்சர்:
கலப்பு தேர்தல் முறை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியில் உள்ள கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி கடந்த தினங்களில் சகல கட்சிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார். 255 எம்.பி.கள் கொண்ட கலப்பு முறை தொடர்பில் கட்சிகளிடையே உடன்பாடு காணப்படுகிறது.
சகல கட்சிகளினதும் யோசனைகளை ஆராய்வதற்காக அமைச்சர்களான சரத் அமுனுகம, எஸ்.பி. திசாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம், சம்பிக ரணவக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, பழனி திகாம்பரம், ரிசாத் பதியுதீன் அடங்கிய குழு அமைக்கப் பட்டது. இதன் முதல் கூட்டம் நேற்று (14) இடம்பெற்றது. இந்தக் குழு சகல யோசனைகளையும் கவனத்திற்கொண்டு தனது இறுதி அறிக்கையை அடுத்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக் கூறும் புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத் துவதாக 100 நாள் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.
எல்லை நிர்ணயத்திற்கு 3 மாதம் செல்லும் என ஆணையாளர் அறிவித் துள்ளார்.
எனவே புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறோம் அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை, தகவலறியும் சட்டம், கணக்காய்வு சட்டம் என்பவற்றையும் நிறைவேற்ற உத்தேசித்திருக்கிறோம். இந்த சட்ட மூலங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்த பாராளுமன்றத்திலே தகவ லறியும் சட்டமூலம் கொண்டுவரப்படும் என சிலர் கூறியுள்ளனர் ஆனால் இது 100 நாள் திட்டத்தில் வழங்கப்பட்ட உறுதியாகும் எனவே 100 நாளில் அதனை நிறைவேற்ற இருக்கிறோம் என்றார்.