GuidePedia

நீதிமன்றங்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நீதிமன்ற சுயாதீனத்தை உச்ச அளவில் உறுதிப்படுத்தி புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க போன்றோர் நீதிமன்றத்துக்கு விடுத்த வேண்டுகோளுக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களுமின்றி சுயாதீனமான தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தின் சுயாதீன செயற் பாடாகும். எட்டு கோடி ரூபா செலவில் நிர்மாணிக் கப்பட்ட அக்குறணை பிரதேச சபையின் புதிய கட்டடத்தை நேற்று (14) திறந்துவைத்து உரை யாற்றும் போதே ஜனாதிபதி இதை தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில் அச்சபைகளின் ஆட்சிக் காலத்தை நீடிப்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும் பாராளுமன்றமோ மாகாணசபைகளோ உள்ளூராட்சி மன்றங்களோ அவற்றின்காலம் முடிந்தபின்பும் அதனை மேலும் நீடித்துக்கொள்வது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

மக்கள் பிரதிநிதிகளின் மன்றங்கள் அவர்கள் வழங்கிய ஆணைக்காலங்களில் மேல் நீடிக்கப்படக்கூடாது ஆயுட்காலம் முடிவடைய முன்னர் உள்ளூராட்சி சபைகளை கலைப்பதாக சிலர் போலி விமர்சனம் செய்கின்றனர். மார்ச் 10ம் திகதியுடன் 234 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலங்கள் முடிந்துவிட்டன. எனினும் மே 15 இன்று வரை அதை நீடித்தோம் இனிமேலும் இதை நீடிக்க முடியாது. உள்ளூராட்சி சபை என்பது ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும் அதாவது 1970க்கு முன் ‘கம்சபாவ’ முறைமை இருந்தது.

இது மக்களுக்கு சமீபமாக இருந்து கிராம மக்களினது நிருவாகத் தேவைகளை மட்டுமன்றி கலை, கலாசாரம் இன்னோரன்ன பணிகளை சிறப்பாக நடாத்திவந்தன. இந்த காலத்தில் குறிப்பாக கிராம மக்களினால் நன்கு அறியப்பட்டுள்ள ஒருவரே வேட்பாளருக்கு முன் நிறுத்தப்படுவர்.

ஆனால் கடந்த 1970ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன மூலம் கொண்டுவரப்பட்டுள்ள பிரதேச சபை முறைமை மூலம் அரசியலின் கலாசாரமே மாற்றம் பெற்றுள்ளது என்றார்.



 
Top