வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி வருகின்ற நபர்களை வைத்தியசாலைச் சிற்றூழியர்களாக உள்ளீர்க்கின்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
வைத்தியசாலை அத்தியட்சகர்களுக்கு இது சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்கள் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சால் வழங்கப்பட்டு உள்ளன என்றும் இதில் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி விசேட அக்கறை காட்டி வருகின்றார் என்றும் கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை அத்தியட்சர்கள் உரிய விளக்கங்களை சுகாதார தொண்டர்களுக்கு வழங்கி உள்ள நிலையில் தொண்டர்கள் முன்னரைக் காட்டிலும் உத்வேகத்துடன், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
அண்மையில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வந்திருந்தார் என்றும் இவரை சுகாதார தொண்டர்கள் சந்தித்து பேசினர் என்றும் இவர்களின் விபரங்களை திரட்டிக் கொண்டு அமைச்சர் சென்றார் என்றும் இவ்வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்களில் ஒருவரான பரமானந்தம் மோகனாம்பிகை எமக்கு தெரிவித்தார்.
நாம் இராஜாங்க அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியபோது சுகாதார தொண்டர்களுக்கு இவ்விதம் நியமனம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, விரைவில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
சுகாதார தொண்டர்கள் இந்நியமனத்தை கோரி மிக நீண்ட காலமாக போராடி சலித்து இருந்த நிலையில் இவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மாறி உள்ளார்.