புத்த பெருமானின் போதனைகளை கற்று அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற எமது மக்கள், அப்போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
‘எல்லா உயிர்களிடத்திலும் அன்பு என்னும் புத்தபெருமானின் செய்தியைக் கொண்டுவரும் முப்பெரும் பண்டிகையான வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
பாரதத்தின் சாக்ய இளவரசராக லும்பினியில் பிறந்து, உலக இன்பங்களை துறந்து புத்தகாயாவில் ஞானம் பெற்று, பின்னர் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்று நிருவாண வழியை காட்டுவதற்காக, 45 வருடங்கள் சமய போதனை செய்து குசினராவில் பரிநிருவாணம் அடைந்த புத்தபெருமானின் வாழ்வில் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளை வெசாக் பண்டிகை குறித்து நிற்கிறது.
மானிடர்கள் மட்டுமன்றி எல்லா உயிர்களும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று நித்திய நிருவாண அருளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டும் புத்த பெருமானின் செய்தி, இச் சிறிய எமது தீவிலும் இன்றும் நிலைபெற்று விளங்குகின்றது. எக்காலத்திற்கும் ஏற்ற அப்போதனைகளின் பால் நெருங்கிச் சென்று அதனை எமது வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்வது சகிப்புத்தன்மையும் நல்லெண்ணமும் நிறைந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப உதவும்.
மானிடர்களின் நன்மைக்காக புத்தபெருமான் போதித்த பஞ்சசீல கொள்கையை கடைப்பிடிப்பதானது மானிட சமூகத்திற்கு ஒரு சொத்தாக அமையும் அதேநேரம், இப்பூமியில் உள்ள எல்லா உயிரினங்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கவும் உதவும்.
புத்தபெருமான் ஒரு சால மர நிழலில் பிறந்து, அரச மர நிழலில் ஞானம் பெற்று, ஒரு மரத் தோப்பில் பரிநிருவாணம் அடைந்தமை மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்க வேண்டிய நெருங்கிய உறவு பற்றிய மிகப்பெரும் செய்தியை கொண்டு வருகின்றது. இதுவே பௌத்த போதனைகளின் அடிப்படை பெறுமானமாகும்.
இந்த வெசாக் பண்டிகை மெத்தா, முதித்தா, கருணா, உபேக்கா ஆகிய பௌத்த போதனைகளால் வளம்பெற்ற, சகவாழ்வு, சமத்துவம் மற்றும் எல்லோருக்கும் நீதி என்பவற்றை உறுதி செய்கின்ற, ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துவரும் தருணத்தில் உதயமாகும் இந்த வெசாக் பண்டிகை ஒரு மிகப்பெரும் அருளாகும்.
புத்த பெருமானின் போதனைகளை கற்று அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற எமது மக்கள் அப் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அதனூடாக ஆன்மீக விடுதலை பெற்று ஒரு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப பங்களிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
