தேர்தல் முறை மாற்றத்தை பிரதானமாக உள்ளடக்கிய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று, இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையில், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில், நேற்றும் நேற்று முன்தினமும் சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டன.
இதன்போது எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லையென்றாலும், அனைத்து கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.
கட்சிகள் ஒரு உடன்பாட்டுக்கு வந்து 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறைக்கு வர கால அவகாசம் தேவையென்பதால் பழைய தேர்தல் முறையின் கீழேயே தேர்தல் நடைபெறுமென ஜனாதிபதியும் பிரதமரும் உடன்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
மாறாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில், பொதுத் தேர்தலையடுத்து அமைக்கப்படும் புதிய நாடாளுமன்றில் அது சமர்ப்பிக்கப்படும்.
எவ்வாறெனினும், இன்றைய கலந்துரையாடலில் இது தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை புதிய தேர்தல் முறையின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
