GuidePedia

நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.    
அத்துடன் புதிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் ஒக்ரோபர் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஒக்ரோபர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக, 
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால், 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படும் என்றும்  தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.   வாக்காளர் பெயர்ப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல்கள் திணைக்களத்தால் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது. 
வடக்கு மாகாணத்தில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பெயர்ப் பட்டியல் மீளாய்வு இடம்பெறுகின்றது.   அதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவுக்குரிய "பிசி' படிவம் கிராம சேவையாளர்களால் வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளது. 
எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் இந்த மாதம் 31 ஆம் திகதிக்குள் கிராம சேவையாளர்களால் இவை வீடு வீடாக விநியோகித்து முடிக்க வேண்டும்.    ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர் தினமாகும். ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில், விநியோகிக்கப்பட்ட "பிசி' படிவங்கள் மீளவும் கிராம சேவையாளர்களால் பெற்றுக் கொள்ளப்படும். பின்னர் அவை பரிசீலிக்கப்பட்டு, புதிய பட்டியல் காட்சிப்படுத்தி, மீளாய்வுக்கு சந்தர்பம் வழங்கி அதன் பின்னர், வாக்காளர் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்படும்.   
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியல் ஒக்ரோபர் 31 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும். அதன் பின்னர் நடைபெறும் சகல தேர்தல்களிலும், 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படும்.



 
Top