கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கோட அள்ளி வலசு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 12 வயது மகளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் திருப்பதி என்ற சந்தோசுக்கும் (30) கடந்த பிப்ரவரி மாதம் 9–ந்தேதி அரூர் இருளப்பட்டி காளியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் 12 வயது சிறுமிக்கு விருப்பம் கிடையாது. அவர் 8–ம் வகுப்பு படித்ததால் திருமணத்திற்கு பிறகு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.
கடந்த பிப்ரவரி 8–ந்தேதி இருளப்பட்டி கோவிலில் திருமணம் செய்ய அவர்கள் சென்ற போது கோவில் பூசாரி 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது என்று கூறி உள்ளார். மேலும் கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ் இல்லாமல் திருமணத்தை தன்னால் நடத்த முடியாது என்றும் கூறி விட்டார். ஆனால் அந்த பூசாரிக்கு தெரியாமல் அதே கோவிலில் திருமணத்தை மறுநாள் (பிப்ரவரி 9–ந் தேதி) நடத்தி விட்டனர்.
இந்த திருமணத்துக்கு 12 வயது சிறுமியின் அக்காள் லட்சுமி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த பிறகு திருப்பதி கட்டிட மேஸ்திரி வேலைக்கு சென்றார். மாணவி இல்லறத்திற்கு இணங்காததால் அவரை கட்டி வைத்து சித்ரவதை செய்தார். இந்த தகவல் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சித்தார்த்தன், கலெக்டர் விவேகானந்தன் ஆகியோருக்கு தெரியவந்தது.
கலெக்டர் உத்தரவின் பேரில் அரூர் டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, அரூர் போலீசார் மற்றும் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தி 12 வயது சிறுமியின் கணவர் திருப்பதி, சிறுமியின் அக்கா லட்சுமி, ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிறுமியை மீட்டு தர்மபுரி சைல்டு லைன் அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாக கூறினார்.
சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த அவரது அக்கா லட்சுமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து வந்து சந்தோசுடன் வசித்து வந்தார். பின்னர் தனது கள்ளக்காதலனுக்கே தனது தங்கையை திருமணம் செய்து வைத்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
கைதான சந்தோஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
