ஹெவ்லொக் றகர் குழுவின் தலைவரும் பிரபல்யமான றகர் விளையாட்டு வீரருமான வசீம் தாஜுதீனின் ஜனாஸா, நேற்று திங்கட்கிழமை காலை தோண்டியெடுக்கப்பட்டது.
தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது தாஜுதீனின் ஜனாஸா என்று அவரது சகோதரியும், சகோதரனும் அடையாளம் கண்டனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதியை அடுத்தே அவரது ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது. இதன்போது, அவரது ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு புதைக்குழி வெட்டிய நகர சபை ஊழியர்கள் இருவர், பள்ளிவாசலின் சேவையாளர்கள் இருவரும் பிரசன்னமாய் இருந்தனர். அத்துடன் நீதிமன்ற வைத்திய அதிகாரி, பொலிஸ், தெஹிவளை கிராமசேவகர் ஆகியோர் அவ்விடத்தில் பிரசன்னமாய் இருந்தனர்.
2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸாவை நேற்று 10ஆம் திகதி திங்கட்கிழமை தோண்டியெடுப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமை அனுமதிவழங்கியிருந்தார்.
அவரது ஜனாஸாவை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து ஜனாஸா புதைக்கப்பட்டுள்ள மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாஸா, நேற்று தோண்டப்பட்டது. இஸ்லாம் முறைப்படி ஜனாஸாவின் இறுதி கிரியைகளை மேற்கொண்ட நபரும் அவ்விடத்துக்கு வருகைதந்திருந்தார்.
ஜனாஸாவை தோண்டியெடுக்கும் நடவடிக்கை காலை 7.30க்கு ஆரம்பமாக 9.50க்கு நிறைவடைந்தது.
ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அன்றையதினம் நட்டுவைக்கப்பட்ட வேப்பமரத்தை அவருடைய சகோதரியும் சகோதரரும் அடையாளம் காட்டினர். அந்தமரம் 12 அடிக்கு வளர்ந்திருந்தது. அந்த குழியில் கானேஷன், வட்டசுதா உள்ளிட்ட கன்று வகைகளும் நாட்டப்பட்டிருந்தன. அக்கன்றுகளில் பூக்களும் மலர்ந்திருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவற்றையும் வேப்ப மரத்தை வேரோடு அப்புறப்படுத்தியதன் பின்னரே குழி அகழப்பட்டது. குழியை மூன்று, நான்கு அடி ஆழத்துக்கு தோண்டிக்கொண்டு போகும் போது ஜனாஸா இருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. அந்த அறிகுறியையடுத்து மௌலவிமார்கள் மதப்பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டு சவம் வைக்கும் வாகனத்தில் வைக்கும் வரையிலும் மதப்பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஜனாஸாவை அன்று அடக்கம் செய்த நபரின் தகவல்களுக்கு அமைய ஜனாஸா, குழிக்குள் தென்பக்கமாக திரும்பியிருந்தது. எரிகாயங்களுடன் இருந்த ஜனாஸாவை 11 மீற்றர் நீளமான வெள்ளை நிறத்திலான இறப்பர் சீட்டினால் சுற்றிக்கட்டப்பட்டதாகவும் முகத்தையும் அந்த சீட்டினால் மூடியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பிரகாரமே சடலமும் இருந்தது.
பிரதான நீதிமன்ற அதிகாரி ஜின் பெரேராவின் தலைமையிலான நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் குழுவும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாய் இருந்தனர்.
சட்டங்கள் இல்லாத பலகைகளினால் அடிப்பக்கம் இன்றி நான்கு பக்கங்களும் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த செவ்வகம் வடிவில் மறைக்கபட்டிந்த பலகை பெட்டிக்குள் ஜனாஸா இருந்ததுடன் பலகையிலான மூடியில் மூடப்பட்டிருந்தது.
ஜனாஸாவை அடக்கம் செய்தவர்கள் வழங்கிய தகவல்களை ஒப்பிட்டு பார்ப்பதற்காக அந்த இடத்திலிருந்து மண் மாதிரிகளும் பரிசோதனைகளுக்காக எடுத்துகொள்ளப்பட்டன.
பிரபல்யமான றகர் விளையாட்டு வீரருமான வசீம் தாஜுதீன் பயணித்துகொண்டிருந்த கார், நாரஹேன்பிட்டியில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதியன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.
அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பரிசோதனை அறிக்கைகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே ஜனாஸைவை தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் கோரப்பட்டிருந்தது. அந்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்தே ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது.
இதுதொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களும் படப்பிடிப்பாளர்களும் மையவாடிக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. குடும்பத்தினர் விருப்பமின்மையினால் ஜனாஸாவை தோண்டியெடுப்பது தொடர்பில் செய்தி சேகரிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.