GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்ற வருதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹங்குனுகொல பெலஸ்ஸவில் பங்கேற்ற கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றிருந்தார்.

அண்மையில் பாராளுமன்றில் 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் நடைபெற்ற இரகசிய கூட்டமொன்றை, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி எம்.எஸ். விக்கரமசிங்க மறைந்திருந்து ஒட்டுக் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரான விக்ரமசிங்க மறைந்திருந்து ஒட்டுக் கேட்பதனை அவதானித்த ஜனாதிபதி, அவரை அழைத்து கடுமையாக திட்டி இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி, ஜனாதிபதிக்கு விசுவாசமாக செயற்படாத நிலைமை மிகவும் ஆபத்தானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹங்குனுகொலபெலஸ்ஸ சம்பவத்தின் போதும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மெத்தனமாகவே நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாரின் சார்பில், பிரதிக் காவல்துறை மா அதிபர் இவ்வாறு தகவல் திரட்டுகின்றார் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பிலான இறுதி நேர இரகசிய பேச்சுவார்த்தைகளை, பிரதிக் காவல்துறை மா அதிபர் விக்ரமசிங்க  ஏன் எதற்காக யாருக்காக ஒட்டுக் கேட்டார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு ஆரோக்கியமான நிலைமையாக அமையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



 
Top