GuidePedia


டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் வருகிற 6–ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதில் ராகுல் காந்தியை கட்சி தலைவர் ஆக்குவது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
எம்.பி.க்களுக்கு விருந்து
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற கட்சித் தலைவராகவும் இருந்த சமயத்தில் கட்சி எம்.பி.க்களுக்கு வருடத்தில் 2 முறை விருந்து அளிப்பார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒரு முறையும், குளிர்கால கூட்டத்தொடரின் போது ஒரு முறையும் இவ்வாறு விருந்து அளிப்பார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. அதேசமயம் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி 57 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் கடந்த 15–ந்தேதி டெல்லி திரும்பினார். அவர் மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகள், குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்.
6–ந்தேதி ஆலோசனை
மத்திய அரசு மீது விவசாயிகள் விரோத அரசு என்ற முத்திரை குத்த திட்டமிட்டு போராடி வருகிறார். டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தியதுடன், இந்தியா முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதயாத்திரையும் நடத்தி வருகிறார்.
இதுவரை எம்.பி.க்கள் கூட்டம் கூட்டப்படாத நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வருகிற 6–ந்தேதி (புதன்கிழமை) மாலை விருந்துக்கு வரும்படி கட்சி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த விருந்தின்போது சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மூத்த தலைவர்களுடனும், எம்.பி.க்களுடனும் கலந்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ராகுல் தலைவராகிறார்?
நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்ற விவகாரங்கள் குறித்தும் அவர்கள் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். நீண்டநாள் விடுமுறைக்கு பின்னர் ராகுல்காந்தி அரசியலுக்கு திரும்பியுள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அதுதவிர ராகுல் காந்தியை கட்சிக்கு தலைவர் ஆக்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
இதுதவிர 5–ந்தேதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தனியாக சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 44 எம்.பி.க்களும், டெல்லி மேல்–சபையில் 68 எம்.பி.க்களும் உள்ளனர்.



 
Top