சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 52 பேர் கொன்று குவிக்கப்பட்டிருப்பதாக சிரிய மனித உரிமைக்கான கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
சிரியாவில் ஒரு பக்கம் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகிற உள்நாட்டு போர் 4-வது ஆண்டாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன. அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ஆதரவாக குர்தி படையினரும் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு அலெப்போ மாகாணத்தில், பிர்பாஹ்லே கிராமத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை தீவிரமாக நடத்தின. ஆனால் இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 52 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவார்கள். இன்னும் 13 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த தகவல்களை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் ரபி அப்தெல் ரகுமான் கூறுகையில், “பிர்மாஹ்லேயில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள்தான் சிக்கி பலியாகினர். அங்கு ஐ.எஸ். நிலைகளே இல்லை. அங்கு எந்த மோதல்களும் கிடையாது. இந்த நிலையில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய குண்டுவீச்சில் ஒரு ஐ.எஸ். தீவிரவாதிகூட பலியாகவில்லை” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “பக்கத்து நகரமொன்றில் நடந்த மோதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்” என கூறினார். இதற்கிடையே ஐ.எஸ். எதிர்ப்பு தாக்குதலை நடத்தி வரும் கூட்டுப்படையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், கொபானி நகர் அருகே ஐ.எஸ். தந்திர பிரிவுகளை குறி வைத்து 6 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் இதுவரை அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் இதுவரை 2,000 பேர் பலியாகி உள்ளதாகவும், அவர்களில் 1,922 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
