கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றபோது, அரியானாவில் 90 விடைகள் விளியானது. நவீன செல்போன் தொழில்நுட்பத்துடன் கூடிய உள்ளாடைகள் மற்றும் புளூடூத் மூலம் மாணவர்களுக்கு இந்த விடைகள் அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு, 2 பல் டாக்டர்கள் மற்றும் ஒரு எம்.பி.பி.எஸ் மாணவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து புளூடூத் உள்ளாடைகள் மற்றும் 90 கேள்விகளுக்கான விடைகள் கைப்பற்றப்பட்டன. அவர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கும்பல் மூலம் குறைந்தது 9 மாணவர்கள் விடைகளை பெற்றிருக்கலாம் என்றும், இதற்காக 15-20 லட்சம் பணம் கொடுத்திருப்பதாகவும் போலீசார் விசாரணையில் கூறுகின்றனர். இந்த தொழில்நுட்ப உள்ளாடைகள் டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
