பத்தொன்பது ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூருவில் நடந்து வந்த, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவை, விடுதலை செய்து, நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். இதனால், அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. நாளை முடிவு அறிவிக்கப்படும் என, தெரிகிறது.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் தொடர்ந்து, 19 ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்துக்கு முடிவு ஏற்பட்டு, ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்துள்ளார்.
இதனால், ஆட்சியில் அடுத்தது என்ன என்ற பரபரப்பும், ஆட்சி பொறுப்பை அவர் எப்போது ஏற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், தற்போதுள்ள தமிழக அமைச்சரவையே தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களாக, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் இடைவிடாது நடத்திய வழிபாடுகளும், பரிகாரங்களும் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளன. தீர்ப்பு தந்த மகிழ்ச்சியை, அ.தி.மு.க.,வினர் நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர்.
அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ள போதிலும், அக்கட்சியினர் மத்தியில், ஜெயலலிதாவின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்து கொள்வதற்காக, நேற்று காலையில், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், போயஸ் தோட்டம் சென்றனர். ஆனால், ஜெயலலிதாயாரையும் சந்திக்கவில்லை. முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டும் சில நிமிடங்கள் பேசினார்.
நேற்றும், இன்றும் அஷ்டமி, நவமி என்பதால், அவர் கட்சி அலுவலகம் வருவதை தவிர்த்து விட்டார். மேலும், தீர்ப்பு பற்றிய முழு விவரங்களை அறியும் முனைப்பில் அவர் இருந்ததால், வேறு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
தீர்ப்பு முழு விவரம் கிடைத்ததும், அதை கவர்னரிடம் அளிக்க வேண்டி உள்ளது. அதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்., முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை கவர்னரிடம் அளிக்க வேண்டும். அதன் பிறகு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூடி, ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். பின், ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.
அனேகமாக, ராஜினாமா நடவடிக்கைகள் நாளையே நடக்கலாம். பதவியேற்பையும் நாளையே வைத்துக் கொள்ள வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விருப்பப்படுகின்றனர்.
17ல் பதவியேற்பு விழா?
ஆனால், வருகிற, 17ம் தேதி அமாவாசை தினம் என்பதால், அன்று பதவியேற்பது தான் சிறப்பாக இருக்கும் என, ஜோதிடர்கள் நாள் குறித்துள்ளதால், அன்றைய தினமே பதவியேற்பு விழா நடக்க, அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கூடவே, அந்த நாளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருப்பதால், அந்த நாளை தான், ஜெயலலிதா பதவியேற்பதற்கான நாளாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம். அதாவது, மே 17 அன்று தான், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதற்கிடையில், ஜெயலலிதா தலைமையில் பதவியேற்க உள்ள, புதிய அமைச்சரவையில், அதே அமைச்சர்கள் நீடிப்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, புதுமுகங்கள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்போதுள்ள அமைச்சரவையில், கிட்டத்தட்ட 10 பேர் வரை மாற்றப்படலாம் என, கூறப்படுகிறது.
இவர்கள் மீது ஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு நிறைய புகார்கள் வந்துள்ளன. ஆனால், சட்டப் பிரச்னையில் அவர் சிக்கியிருந்ததால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இப்போது, அதில் இருந்து மீண்டுவிட்டதால், அதிரடி மாற்றங்களுடன், தனக்கான அமைச்சரவையை அவர் அமைத்துக் கொள்ளக்கூடும். இவ்வாறு, அ.தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி வாழ்த்து:
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி, டெலிபோனில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்தார். தமிழக கவர்னர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரும் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ்.,க்கு 2வது முறை:
ஜெயலலிதா வழக்கில் இருந்து, விடுதலையானதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
டான்சி வழக்கில் சிக்கி, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததும், 2001 செப்டம்பர் 21ம் தேதி, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா டான்சி வழக்கில் இருந்து விடுதலையானதும், 2002 மார்ச் 1ம் தேதி, முதல்வர் பதவியை, பன்னீர்செல்வம் துறந்தார்.
அடுத்து, 2014 செப்டம்பர் 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். மீண்டும் இரண்டாவது முறையாக, செப்டம்பர் 29ம் தேதி, பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.
நேற்று, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். எனவே, மீண்டும் அவர் முதல்வராவார் என்பதால், பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக, முதல்வர் பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் முறை, 163 நாட்கள், முதல்வராக இருந்தார். இரண்டாவது முறை, நேற்று வரை, 225 நாள், முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இன்னும் எத்தனை நாள் இப்பதவியில் இருப்பார் என்பது இன்று தெரியும்.
