GuidePedia

(TNN)
மகாகவி பாரதியார் கண்ட சமத்துவ சமுதாயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மலர்ந்து உள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ துறை இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்து உள்ளார்.
இவர் கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
“ மகாகவி பாரதியார் கண்ட சமத்துவ சமுதாயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மலர்ந்து உள்ளது. இதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டு உள்ளார்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று மகாகவி பாரதியார் பாடினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸநாயக்க, புதிய இடதுசாரி முன்னணியின் விக்கிரமபாகு கருணாரட்ண ... என்று எல்லோருமே ஜனாதிபதியாக உள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று கொழும்பில் தெரிவித்து உள்ளார்.
எல்லோரும் மன்னர்களாக உள்ள நிலை உண்மையான ஜனநாயகத்தை, சமத்துவத்தை காட்டுகின்றது. ஒரு தனிப்பட்ட நபரிடம் ஆட்சி, அதிகாரம் கொட்டிக் கிடக்காததை வெளிப்படுத்தி நிற்கின்றது. சர்வதிகாரம் இல்லாத நல்லாட்சிக்கு சான்றாக உள்ளது. நல்லாட்சியின் 100 வேலைத் திட்டத்துக்கு கிடைத்த வெற்றியும் ஆகும்.
எதிர்க் கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். ஆனால் எதிர்க் கட்சியினர்தான் எதிர்க் கட்சி தலைவர் யார்? என்பதை சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் எதிர்க் கட்சியினர் இப்பதவியை சம்பந்தனுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
எதிர்க் கட்சி தலைவராக இருக்க நிமால் ஸ்ரீபால டீ சில்வா அருகதை அற்றவர். ஏனென்றால் இவர் அங்கம் வகிக்கின்ற கட்சியின் தலைவர்தான் அரசாங்கத்தின் தலைவரும், அமைச்சரவையின் தலைவரும் ஆவார். ”



 
Top