உத்தேச 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தமாக புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் போது, அதனால் சிறுபான்மைச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும், சிறிய அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படாமல் உரிய முறையில் பிரதிநிதித்துவங்களை பெறக்கூடிய வகையில் 10 தினங்களுக்குள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு வியாழக்கிழமை (30) பிற்பகல் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலொன்றின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தமென மசோதா வடிவில் புதன்கிழமை (29) இரவு அமைச்சரவையில் ஆவணமொன்று முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், பழனி திகாம்பரம் ஆகியோர் சிறுபான்மைச் சமூகங்களையும், சிறிய கட்சிகளையும் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் பாதிக்காத வகையில் கூட்டாக ஒரு ஆவணத்தையும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளனர். அமைச்சரவையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வரைவு, இறுதியானதாக அல்லாமல் கலந்துரையாடல்களுக்காகவே அங்கு சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தாக அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இதற்குரிய வரைவை தயாரிப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளாலும், சிறிய கட்சிகளாலும் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனைய உறுப்பினர்கள் கொழும்பிற்கு வெளியில் இருந்ததனாலும், தவிர்க்க முடியாத காரணங்களாலும் இந்த அவசரக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது சிறுபான்மைக் கட்சிகளும், சிறிய கட்சிகளும் பாதிக்கப்படாமல் பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்களின் வரிசையில் முக்கிய சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்லத்தில் வியாழக்கிழமை (30) பிற்பகல் நடைபெற்றது.
இதன் போது, விசாக பௌர்ணமி விடுமுறையை அடுத்து வரும் நாட்களில் தொடர்ச்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதென்றும், அத்துடன் தங்களுக்குள் இடையறாத பேச்சு வார்த்தைகளை நடாத்துவதென்றும். பின்னர் ஊடகவியாலளர் மாநாடொன்றைக் கூட்டி நிலைமையையும், முடிவையும் நன்கு விளக்குவதாவும் தீர்மானிக்கப்பட்டது.
19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் மிக அதிகப்படியான பெரும்பான்மை வாக்குகளால் செவ்வாய்கிழமை (28) இரவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான புதிய 20ஆவது சீர்திருத்தத்தை விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்தோடு பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ள நிலையிலும், பிரதான பேசு பொருளாக இந்த விவகாரம் தற்பொழுது மாறியிருக்கின்ற நிலையிலும் தங்களது கட்சிகளின் நிலைப்பாட்டை மிகவும் ஆணித்தரமாகவும், உறுதியாகவும் முன்வைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் கலந்துரையாடல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கட்சியின் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி, கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், முத்தலிப் பாவா பாறூக், எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோர் பங்குபற்றினர்.