GuidePedia

நாட்டில் தொழிலாளர் தினத்தை நினைவு கூறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே பூரண உரிமையுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பொது ஜன ஐக்கிய முன்னணி ஆகிய சகல அரசாங்கங்களும் நாட்டில் உழைக்கும் மக்களினது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரும் பணியாற்றியுள்ளன. இத்தகைய வரலாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை. ஒரு நாளுக்கு 10 ரூபா சம்பள அதிகரிப்பு கேட்டதால் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் அரச சேவையில் இருந்து விரட்டப்பட்டனர்.
இவ்வாறாக உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எம்மால் மறக்க முடியாது. 30 வருட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து தாய்நாட்டை ஒளிமயமாக்க உழைக்கும் மக்களின் சக்தி அவசியமாகும்.
மேலும், சிறப்புமிக்க இன்றைய தினத்தை நினைவுகூர எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லாத பூரண உரிமை ஸ்ரீ.சு.க. உண்டு. அந்த உரிமையை எவராலும் எப்போதும் பறிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




 
Top