இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டிருந்த விரிசலை சீரமைக்கவே அந்நாட்டு ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் கொள்கை வகுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி தெரேசித்தா ஸ்காசெஸ் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சுமுக உறவு இருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம், அமெரிக்காவுடன் ஒத்திசைந்து செல்கிறது. இந்த நிலையிலேயே யுத்தக்குற்ற அறிக்கை செப்டம்பர் மாதம் வரையில் காலம் தாழ்த்தவும் இணங்கப்பட்டது.
தற்போது இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு நாடுகளின் இராஜதந்திர உறவுகளையும் சீரமைக்கும் நோக்கிலேயே ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் ஜோன் கெரி இலங்கையில் ஜனாதிபதி, மற்றும் பிரதமரை சந்திப்பதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்திப்பார் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.