2021ம் ஆண்டு நடைபெறும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், இலங்கை ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை, 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னர், 32 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், இது 35 வயதாக உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவினால் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
2021ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவைப் போட்டியிட வைக்கும் திட்டத்துடனேயே, மகிந்த ராஜபக்ச தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது, நாமல் ராஜபக்ச 35 வயதைப் பூர்த்தி செய்யமாட்டார்.
1986ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் பிறந்த நாமல் ராஜபக்சவினால், அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களின் பின்னர் தான், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் தகைமையைப் பெற முடியும்.
இதனால், அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
19வது திருத்தச்சட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளரின் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரித்தமைக்கு, நாமலைப் போட்டியிட முடியாமல் தடுப்பதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
எனினும், நாட்டுக்குத் தலைமை தாங்கும் ஜனாதிபதி, அதற்குரிய தகைமையுடையவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, வயதெல்லை அதிகரிக்கப்பட்டதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.