GuidePedia


இங்கிலாந்தில் 7-ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பில் ஆளுங்கட்சி முந்துகிறது.  

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவுதான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது கடந்த தேர்தலை விட அதிகம்.                 

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களில் 11 சதவீதம் பேர் கருப்பு இன சிறுபான்மையினர் ஆவார்கள். அவர்களில் 12 பேர் இந்திய வம்சாவளியினர். இதேபோன்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 14 இந்திய வம்சாவளியினரை களத்தில் இறக்கி உள்ளது. பிரதமர் டேவிட் கேமரூன், விட்னே தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபாண்ட், டான் காஸ்டர் வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது. இந்த முறையும் இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவுக்கு வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                

இந்த தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்துமே பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதையே காட்டுகிறது. கடைசியாக ‘யு கவ்’ நடத்திய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட ஆளுகிற கன்சர்வேடிவ் கட்சி கூடுதலாக 1 சதவீத ஆதரவை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியை 34 சதவீதம் பேரும், தொழிலாளர் கட்சியை 33 சதவீதம் பேரும் ஆதரிக்கின்றனர். சுதந்திர கட்சிக்கு 13 சதவீதம் பேரின் ஆதரவும், லிபரல் ஜனநாயக கட்சிக்கு 8 சதவீதத்தினரின் ஆதரவும், கிரின்ஸ் கட்சிக்கு 5 சதவீதம் பேரின் ஆதரவும் உள்ளது.                 

இடங்களை பொருத்தமட்டில் கன்சர்வேடிவ் கட்சிக்கு 283 இடங்களும், தொழிலாளர் கட்சிக்கு 261 இடங்களும், லிபரல் ஜனநாயக கட்சிக்கு 32 இடங்களும், ஸ்காட்டிஸ் தேசிய கட்சிக்கு 50 இடங்களும் கிடைக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.      தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 326 இடங்கள் தேவை. அதற்கு வாய்ப்பு இல்லாதபோது தொங்கு பாராளுமன்றம் அமையும்.                  

ஓட்டுப்பதிவு 7-ந் திகதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடியும். ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விடும். எனவே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது 8-ந் திகதியே தெரிந்துவிடும்.  



 
Top