GuidePedia

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 20-ம்தேதி புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதால் பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தேர்வு செய்யும் பணி நடந்தது.
இதில் பெருன்பான்மை வாக்குகள் பெற்று ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒளி அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நேபாளத்திற்கான புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பணிகள் அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் புதிய அதிபரை தேர்வு செய்தே ஆக வேண்டும். அதனால் இம்மாத இறுதிக்குள் அதிபரை தேர்வு செய்யும் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில், கடந்த 2008-ம் ஆண்டு ராம் பாரன் யாதவ் முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top