பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதும், அதனை அரசியல்வாதிகள் கண்டும் காணாதது போல் இருந்ததுமே என்னை அரசியலுக்கு கொண்டு சென்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வியியலாளர்களை சம்மாந்துறை அல்-அமீன் வித்தியாலத்தியாலய மண்டபத்தில் சந்தித்து பிரதேச கல்வி வளர்ச்சி மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
சம்மாந்துறை அதிபர் சங்க தலைவரும், அல்-ஹம்ரா வித்தியால அதிபருமான ஏ.ஏ.அமீர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாயுதீன், தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் மன்சூர்.ஏ.காதர், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பசீல், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.நஜீம், சம்மாந்துறை வலயக் கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் உமர் மௌலான மற்றும் அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், என்னுடைய குடும்பம், நான் சார்ந்த உறவினர்களையும் பார்த்தால் நான் இன்று அரசியலுக்கு வரவேண்டிய தேவையில்லை என்னை படைத்த இறைவன் எனக்கு நிறைய வசதிகளை தந்திருக்கின்றான் ஆனால் நான் இன்று அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தியது இந்த கல்விதான். அதிபரின் மகனாக பிறந்த எனது குடும்பத்தில் கூடுதலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் நானும் ஒரு ஆசிரியானாக வரவேண்டியிருந்தும் எனது பாதையை அரசியலின் பக்கம் மாற்றினேன். 1999ஆம் ஆண்டு கைகாட்டி அஸ்ஹர் வித்தியால அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமும் என்னை அழைத்து எங்களுடைய பாடசாலையில் தரம் எட்டு வரைதான் வகுப்புகளை நடாத்துவதற்கு வசதிகள் இருக்கின்றது எங்களுக்கு தரம் ஓன்பது வரை நடாத்த அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் பௌதீகவளம் இல்லை எனவும் கூறியதுடன் உங்களினால் முடியுமானால் ஒரு கட்டிடத்தை கட்டி தாருங்கள் என்றும் கூறினார்கள் அப்போது அரசியலை பற்றிய எண்ணம் என்னிடம் இல்லை ஆனால் என்னால் இயலுமான உதவிகளை நான் பிறந்த ஊருக்கு செய்து கொண்டு இருந்த நேரத்தில் இவ்வாறான பெரிய சுமையை என் மீது சுமத்திய போது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நீங்கள் அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய உதவியை என்னிடம் கேட்கின்றீர்கள் பாடசாலைகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுப்பது அரசியல்வாதிகள் தான். அவர்கள் சொந்த பணத்தில் கட்டுவதில்லை அவருக்கு கிடைக்கின்ற நிதி ஓதுக்கீட்டில் தான் கட்டுவது. எனினும் நான் பிரதேச மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு கட்டித்தை அமைத்துக் கொடுத்தேன். காரணம் அனேகமான மாணவர்கள் எட்டாம் தரத்துடன் படிப்பை நிறுத்தி விட்டு கல்குவாரிக்கும், வயல் வேலைகளுக்கும் சென்று விடுகின்றார்கள் ஆனால் பிள்ளையை நன்றாக கற்பிக்க வேண்டும் என்று ஆவலுள்ள பெற்றோர்கள் மாத்திரம் தமது பிள்ளைகளை அண்மையிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்பிக்கின்றனர். அப்போது தான் சிந்தித்தேன் அபிவிருத்திகள் செய்ய வேண்டிய அரசியல்வாதிகள் செய்யாமல் இருப்பதினால் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை மக்கள் ஆகையினால் இவ்வாறான பல்வேறு சம்பவங்களை கண்ட நான் ஏன் நான் அரசியலுக்குள் வரக்கூடாது அரசியல் வாதிகள் சரியாக அவர்களுடைய கடமையை செய்யவில்லை என்றால் பாதிக்கப்படுவது கீழ்மட்டத்திலுள்ள மாணவர்கள். அதுவே நான் அரசியலுக்கு வரவேண்டிய உந்து சக்தியாக அமைந்திருந்தது. எனக்கு தற்போது அரசியல் அதிகாரம் ஒன்று கிடைத்துள்ளது அதனை கொண்டு நமது பிரதேசத்திற்கு எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாக பயனை பெற்றுக் கொள்ளலாம் என்பதை பற்றி ஆலோசிப்பதிற்காகவே உங்களை அழைத்திருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.