GuidePedia

(சப்னி)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ அன்சில் பாலமுனை வைத்தியசாலையின் நிலை பற்றிய விளக்கம்மொன்றை மக்களுக்காக வழங்கியுள்ளார். 

சம்பவம்: இத்தனைக்குப் பிறகும் நேற்று இரவு 11.00 மணிக்கு நமது பாலமுனை வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு வைத்தியர் கடமையில் இல்லை.இரவு 8.00 மணியிலிருந்தே வைத்தியர்கள் கடமையில் இல்லை என்பதோடு இனிமேலும் வரமாட்டார்கள் என்று கூறப்பட்டது. சுகாதாரப் பிரதியமைச்சரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது 

வைத்தியர்கள் கடமையில் இருக்கவில்லை என்பதோடு வைத்தியர்களின் வருகைக்காக அரை மணித்தியாலத்திற்கும் மேலாக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதன்போது, இதே வைத்தியர்களின் வருகைக்காக நோயாளிகள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியேற்பட்டிருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த முடிந்தது.

வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தமைக்காக வைத்தியர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளாதபோதிலும்கூட அவர்களை எச்சரித்து 24 மணி நேரமும் வைத்தியர்கள் வைத்தியசாலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு பணிப்பாளர் நாயகம் அவரகள் மாகாண சுகாதார பணிப்பாளரிடமும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் பணிப்புரை வழங்கி விட்டுச் சென்றார்.

ஆனால் இந்நிகழ்வு நடைபெற்று ஒரு வாரம் கடந்துவிட்டபோதிலும் கூட இன்றுவரை இரவுக் கடமைக்காக வைத்தியர் எவரும் இரவு 8 மணிக்குப் பிறகு கடமையில் வைத்தியசாலையில் தங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இப்பதிவினை இடுகிறேன்.

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட வழங்கப்படாத அளவு ஊதியம் வழங்கப்படுபவர்கள் வைத்தியர்கள். சாதாரணமாக ஒரு நாளில் அவர்களது 6 மணி நேர கடமை தவிர மாதாந்தம் 120 மணித்தியாலத்திற்குக் குறையாத மேலதிக நேர கடமையினை பெரும்பாலும் எல்லா வைத்தியர்களும் செய்கின்றனர். ஏனெனில் 120 மணி நேர மேலதிக நேர கடமையாற்றினால் மாத்திமே ஏனைய கொடுப்பனவுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாக ஒரு செய்தி அறிந்தேன்.

அது உண்மையெனில், நமது பாலமுனை வைத்தியசாலையில் தற்போது நான்கு வைத்தியர்கள் உள்ள நிலையில் நான்கு பேரும் 480 மணித்தியாலம் மேலதிகமாக கடமையாற்ற வேண்டும்.

ஒரு நாளில் சாதாரண கடமை நேரம் போக எஞ்சியுள்ள 18 மணித்தியாளங்களும் 30 நாட்களுக்குமாக சேர்த்து 18 x 30 = 540 மணித்தியாலங்கள்தான். ஆக நான்கு வைத்தியர்களும் கடமையாற்றுகின்ற மேலதிக நேரமான 480 மணித்தியாளங்கள் போக எஞ்சியுள்ளது 60 மணித்தியாலங்கள் தான், அதையும் கூட சாதாரண கடமை நேரத்தில் மாற்றங்களை செய்வதன் சரிசெய்து கொள்ள முடியும்,

அப்படியாயின், நாளாந்த கடமை நேரமான காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணிவரையும், பி.ப 2.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரையும் குறைந்தபட்சம் மூன்று வைத்தியர்களும் ஏனைய நேரங்களில் ஒரு வைத்தியரும் கடமையில் இருப்பதற்கான ஊதியத்தினை நமது பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் பெறுகின்றனர்.

ஆனாலும் அவ்வாறு அவர்கள் கடமையில் இருப்பதில்லை.

அதுமட்டுமன்றி அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வெளியே பிரத்தியேகமாக நோயாளிகளை பார்வையிடக் கூடாது என்பதற்காக கொடுப்பனவொன்று அவர்களுக்கு ஊதியத்தோடு சேர்த்து வழங்கப்படுவதாகவும் அறிகிறேன். ஆனால், பிரத்தியேகமாக நோயாளர்களிடம் பணம் பெற்று சிகிச்சையளிக்காத வைத்தியர்களே இல்லை எனக் கூறுமளவுக்கு எல்லா வைத்தியர்களும் அதனைச் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்யாதிருப்பதற்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்கின்றனர்.

இவ்வாறு நியதிகளுக்கு மாற்றமாக பகிரங்கமாக அவர்கள் நடப்பதற்கு காரணம், அவர்கள் என்ன பிழை செய்தாலும் அவர்களை வைத்தியர் என்ற ஒரே காரணத்திற்காக காப்பாற்றிவிடுகின்ற பலமான தொழிற்சங்கம் இருப்பதுதான் என பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனாலும் கடமையை சரியாக நிறைவேற்றும் கனவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அண்மையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விடயத்தைச் சொன்னார். அண்மையில் சம்மாந்ததுறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது கடமையில் இருக்க வேண்டிய வைத்தியர்கள் 27 பேரில் இருவர் மாத்திரமே கடமையில் இருந்தார்களாம்.

ஆனால் அங்கு எந்த ஒரு வைத்தியருக்கு எதிராகவும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை. ஆனால் அதுவே ஒரு சிற்றூழியராக இருந்திருந்தால்.....?

பொதுவாக நான் எனது சொந்த முகபுத்தகத்தில் பிடித்தவற்றை பகிர்வதோடும், மிகப்பிடித்தவற்றுக்கு பின்னூட்டமிடுவதோடும் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொண்ட நான், எனக்கெதிரான பொய்யான அல்லது சோடிக்கப்பட்ட முகநூல் பதிவுகளுக்கே பதிலிடாத நான் - இன்று ஏன் இத்தனை நீளமாக பதிவிடுகிறேன் என்றால்,

இவ்விடயம் தொர்பில் பொது மக்களாகிய நாம் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் மாத்திரமே இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதோடு,

தாமதத்தினால் அல்லது காத்திருப்பதனால் உயிர்கூட போய்விடும் என்ற அவலமான நிலை இந்த சேவையில் மாத்திரமே அதிகமாக காணப்படுவதனாலுமாகும். இவ்வாறானதொரு நிலை காரணமாக அண்மையில் ஒலுவிலில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாவும் பரவலாக பேசிக்கொள்ளப்படுகிறது. என்று அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ அன்சில் அவர்கள் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.




 
Top